கர்நாடகா முழுவதும் 20 நாட்கள் மெகா யாத்திரை! ராகுலுக்குப் போட்டியாக களத்தில் குதித்த பாஜக!

கர்நாடகா முழுவதும் 20 நாட்கள் மெகா யாத்திரை! ராகுலுக்குப் போட்டியாக களத்தில் குதித்த பாஜக!
கர்நாடகா முழுவதும் 20 நாட்கள் மெகா யாத்திரை! ராகுலுக்குப் போட்டியாக களத்தில் குதித்த பாஜக!

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மேற்கொண்ட யாத்திரைபோல், கர்நாடகாவில் ஆளும் பாஜகவும் 20 நாட்கள் யாத்திரை மேற்கொள்ள திட்டமிட்டு, இன்று தொடங்க இருக்கிறது.

அரசியல் வரலாற்றில் நடைப்பயணம்

அரசியல் வரலாற்றில் நடைப்பயணம் என்பது தவிர்க்க முடியாததாகி வருகிறது. அன்றும் சரி, இன்றும் சரி நடைப்பயணம் வெற்றி கண்டிருப்பதாகவே மக்கள் கருதுகின்றனர். அன்று ஆங்கிலேயர்களை எதிர்த்து மகாத்மா காந்தி நடைப்பயணம் மேற்கொண்டு வெற்றிகண்டார். இன்றும் பல தலைவர்கள் பலவித பிரச்சினைகளுக்காக நடைப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். சமீபத்தில்கூட, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், கேரள வயநாடு தொகுதியின் எம்பியுமான ராகுல் காந்தி, குமரி முதல் காஷ்மீர் வரை நடைப்பயணம் மேற்கொண்டார்.

கர்நாடகாவில் சட்டமன்றத் தேர்தல்

இந்த நிலையில், பாஜகவும் நடைப்பயணத்தை மேற்கொள்ள இருக்கிறது. அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு, இதன் வேகம் மாநிலங்கள் முழுவதும் சூடுபிடித்திருக்கிறது. தற்போது நடக்கும் மாநில சட்டமன்றத் தேர்தல்களின் வெற்றி நாடாளுமன்றத் தேர்தலின் வெற்றியைத் தீர்மானிக்கும் என்பதில் மாநில கட்சிகள் போட்டிபோட்டு செயலாற்றி வருகின்றன. அந்த வகையில், கர்நாடகாவில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது.

இதை எதிர்கொள்ளும் வகையில் காங்கிரஸ், பாஜக, முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தயாராகி வருகின்றன. பாஜக சார்பில், இந்தத் தேர்தலுக்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பொறுப்பாளராகவும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இணை பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. என்றாலும் வரும் தேர்தலில் கடந்தமுறை போல அல்லாமல், இந்தமுறை தனி பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க பாஜக திட்டமிட்டுள்ளது.

கர்நாடகாவில் பாஜக நடைப்பயணம்

மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 150க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வென்று, ஆட்சியைப் பிடிக்க பாஜக தரப்பில் வியூகம் அமைத்து வருகின்றனர். இதற்காக 20 நாள்களுக்கு ”விஜய் சங்கல்ப் யாத்ரா” எனும் மெகா யாத்திரை நடத்த உள்ளனர். இந்த யாத்திரை இன்று (மார்ச் 1) தொடங்க உள்ளது. இதன் ஒரு பகுதியாக மொத்தம் 4 மெகா யாத்திரைகளை பாஜக நடத்த உள்ளது. இந்த மெகா யாத்திரை, நான்கு வெவ்வேறு திசைகளில் தொடங்க இருக்கிறது. இதன் முதல் யாத்திரையை, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, இன்று சாமராஜநகர் மாவட்டத்தில் உள்ள மலே மகாதேஷ்வரா மலையில் இருந்து தொடங்கி வைக்கிறார்.

இரண்டாவது யாத்திரையை, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நாளை (மார்ச் 2) பெலகாவி மாவட்டத்தில் உள்ள நந்தகாட்டில் இருந்து தொடங்கி வைக்கிறார். மூன்றாவது யாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாளை மறுநாள் (மார்ச் 3) காலை, பிதார் மாவட்டம் பசவகல்யாணத்தில் இருந்து தொடங்கிவைக்க உள்ளார். அன்று மாலையே அமித் ஷா, நான்காவது மற்றும் இறுதி யாத்திரையை பெங்களூரு அருகே உள்ள தேவனஹள்ளி ஆவதியில் இருந்து தொடங்கிவைக்க உள்ளார். இந்த நான்கு யாத்திரைகளும், கர்நாடகாவின் நான்கு விதமான இடங்களில் தொடங்கி கடைசியில் ஒரே இடத்தில் நிறைவுபெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

மெகா பேரணியில் பிரதமர் மோடி பங்கேற்பு

நான்கு பகுதிகளிலிருந்து 8,000 கி.மீட்டர் தூரத்தைக் கடக்க இருக்கும் இந்த யாத்திரை 20 நாட்கள் நடைபெற உள்ளது. மார்ச் 25ஆம் தேதி இந்த 4 யாத்திரைகளும், தாவங்கேரில் இணைகின்றன. அன்று நடைபெறும் மெகா பேரணியுடன் இந்த யாத்திரை நிறைவடைகிறது. இந்த மெகா பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ள இருக்கிறார். இந்த 4 யாத்திரை ஒவ்வொன்றிலும் தலா 10-12 தலைவர்கள் வழிநடத்த இருக்கிறார்கள். இந்த 4 யாத்திரைகளிலும் 80 பேரணிகள், 74 பொதுக்கூட்டங்கள், 150 சாலை நிகழ்ச்சிகள் நடைபெற இருப்பதாக மாநில பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரலாற்றில் இடம்பிடித்த யாத்திரை தொடங்கும் இடங்கள்

மேலும் இந்த யாத்திரையில், சுமார் 4 கோடி மக்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் நாள் தொடங்கும் இந்த யாத்திரையில், மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்வரும், பாஜகவின் நாடாளுமன்றக் குழு உறுப்பினருமான எடியூரப்பா, கட்சியின் மாநிலத் தலைவர் நளின் குமார் கட்டீல், தேசிய பொதுச் செயலாளர் சிடி ரவி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். யாத்திரை தொடங்கப்பட இருக்கும் இந்த 4 இடங்களும் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

சுதந்திரப் போராட்ட வீரர் சங்கொல்லி ராயண்ணாவின் நினைவுச்சின்னம் அமைந்துள்ள இடமாக நந்தகாடுவும், லிங்காயத்துகளுக்கான புனிதத்தலமாக பசவகல்யாணமும், நடபிரபு கெம்பேகவுடா பிறந்த இடமாக ஆவதியும், ஒரு குறிப்பிட்ட சமூக மக்களின் மதத் தலமாக மலே மகாதேஷ்வராவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

யாத்திரைக்காக சிறப்பு ரதங்கள் தயார்

யாத்திரைக்காக 4 சிறப்பு ரதங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. தலைவர்கள் நின்று உரையாற்றும் வகையில் இந்த ரதங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த ரதத்திற்குள் மொபைல், ஹோம் தியேட்டர், ஆடியோ சிஸ்டம், கேமராக்கள், எல்இடி டிஸ்ப்ளே மற்றும் பவர் பேக்கப்பிற்கான ஜெனரேட்டர் போன்றவற்றை சார்ஜ் செய்யும் வசதிகளும் உள்ளன. ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை இந்தத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படும் நிலையில், அதனை முறியடிப்பதற்காக இந்தத் திட்டத்தை பாஜக கையில் எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

- ஜெ.பிரகாஷ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com