சிறப்பு அந்தஸ்து ரத்துக்குப் பின் ஸ்ரீநகரை கலக்கும் 2 பெண் அதிகாரிகள்
சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட நிலையில் ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் பகுதியில் அமைதியை நிலைநாட்டும் பணியில் இரண்டு பெண் அதிகாரிகள் ஈடுபட்டிருக்கின்றனர்.
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதே மிகப்பெரிய சவால். அந்த வகையில் ஜம்மு காஷ்மீரில் பணியில் உள்ள ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளில் இரு பெண்களும் இடம்பெற்றுள்ளனர். 2013ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான, டாக்டர் சையது செஹ்ரிஷ் அஸ்கர், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை யூனியன் பிரதேசமாக மாற்றும் அறிவிப்பு வெளியான நான்கு நாட்களுக்கு முன்புதான், ஸ்ரீநகரின் தகவல் தொடர்பு இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது அவருக்கு வரையறுக்கப்பட்ட பணி. ஆனால் தற்போது அவர் மக்கள் குறைதீர்க்கும் அதிகாரியாக செயல்பட்டு வருகிறார். மக்கள் தங்கள் குடும்பத்தாரை தொடர்பு கொள்ளவும் மருத்துவம் உள்ளிட்ட சேவைகளை பெறவும் இவரைத்தான் நாடுகின்றனர். ஸ்ரீநகரில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ள 2016ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான பி.கே.நித்யாவுக்கு, ராம் முனிஷ் பாக் முதல் ஹர்வன் டாக்சி கிராமம் வரையிலான பகுதியை கண்காணிக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டது.
இந்த பகுதியில் தான் ஆளுநர் மாளிகை, வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள விஐபிகளின் குடியிருப்புகளும் உள்ளன. இங்கு சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் முக்கிய பொறுப்பை இவர் கையாண்டு வருகிறார்.