“முழு பாதுகாப்புடன் சாமி தரிசனம் செய்தோம்” சபரிமலை சென்ற பெண் பேட்டி

“முழு பாதுகாப்புடன் சாமி தரிசனம் செய்தோம்” சபரிமலை சென்ற பெண் பேட்டி

“முழு பாதுகாப்புடன் சாமி தரிசனம் செய்தோம்” சபரிமலை சென்ற பெண் பேட்டி
Published on

முழு பாதுகாப்புடன் சாமி தரிசனம் செய்ததாக, சபரிமலை‌‌ ஐயப்பன் கோயிலில் வழிபாடு நடத்திய கனகதுர்கா தெரிவித்துள்ளார்.

புதன்கிழமை அதிகாலை 3.45 மணிக்கு பிந்து என்ற 44 வயது பெண்ணும், கனகதுர்கா என்ற 42 வயது பெண்ணும், பலத்த பாதுகாப்புடன் சபரிமலையில் சாமி தரிசனம் செய்தனர். அனைத்து வயது பெண்களும் சபரிமலை செல்லலாம் என்று தீர்ப்பு வழங்கியிருந்தாலும், 10 முதல் 50 வயதுடைய பெண்கள் கோவிலுக்குள் நுழைய பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். 

இந்நிலையில், பிந்து, கனகதுர்கா என்ற இரண்டு பெண்கள் சாமி தரிசனம் செய்து திரும்பினர். இரு பெண்களும் தரிசனம் செய்து திரும்பிய வீடியோ வெளியானது. இதையடுத்து ஐயப்பன் கோவில் நடை சாத்தப்பட்டது. பரிகார பூஜைகளுக்குப்பிறகு கோவில் நடை திறக்கப்பட்டது.

இதனையடுத்து, பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி சபரிமலையில் சாமி தரிசனம் செய்தது எப்படி என்பது குறித்து புதியதலைமுறைக்கு கனகதுர்கா கூறியுள்ளார். “பம்பையில் நீராடிவிட்டு முழு பாதுகாப்புடன் பக்தர்களோடு பக்தர்களாக சபரிமலை ஐயப்பன் தரிசனம் செய்தோம். போகும் போதும் வரும் போதும் எங்களுக்கு எந்த பிரச்னையும் நேரவில்லை” என்று அவர் தெரிவித்தார்.

முன்னதாக, சபரிமலை ஐயப்பன் கோயிலில் இரு பெண்கள் தரிசனம் செய்துள்ள நிலையில் கேரளாவில் சில இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. திருவனந்தபுரத்தில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட சென்ற பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த 5 பெண்கள் தடுத்து நிறுத்தப்பட்ட‌னர். குருவாயூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்ற கேரள அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரனுக்கு பாஜக தொண்டர்கள் கறுப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். 

இதே போல கண்ணூர் சென்ற சுகாதாரத் துறை அமைச்சர் சைலஜாவிற்கு பாரதிய ஜனதாவின் துணை அமைப்பான யுவமோர்ச்சாவின் தொண்டர்கள் கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து போராட்டக்காரர்களை போலீசார் அகற்றினர். சபரிமலையில் பெண்கள் தரிசனம் செய்ய மாநில அரசு துணை போனதாக கூறி காசர்கோடில் பாஜக தொண்டர்கள் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com