சத்தீஷ்கரில் பாஜக எம்.எல்.ஏவைக் கொன்ற நக்சலைட்டுகள் பலி

சத்தீஷ்கரில் பாஜக எம்.எல்.ஏவைக் கொன்ற நக்சலைட்டுகள் பலி
சத்தீஷ்கரில் பாஜக எம்.எல்.ஏவைக் கொன்ற நக்சலைட்டுகள் பலி

சத்தீஷ்கரில் பாஜக எம்.எல்.ஏ மற்றும் 5 பாதுகாப்புப் படையினரைக் கொன்ற நக்சலைட்டுகள் இன்று கொல்லப்பட்டனர்.

நக்சல்கள் ஆதிக்கம் நிறைந்த சத்தீஷ்கர் மாநிலம் தாண்டேவாடா பகுதியில் நக்சலைட்டுகள் கடந்த 9 ஆம் தேதி வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் வாகனத்தில் சென்று கொண்டிருந்த அந்தப் பகுதி பாஜக எம்.எல்.ஏ, பீமா மாண்டவி மற்றும் பாதுகாப்புப் படை வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதையடுத்து அந்தப் பகுதியில் தேடுதல் வேட்டை அதிகரிக்கப்பட்டது. பாதுகாப்புப் படையினர் நக்சலைட்டுகளைத் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில் தவுலிக்காரா பகுதியில் நடந்த தேடுதல் வேட்டையின் போது, 2 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்.

அவர்கள் பெயர், வர்கீஸ், லிங்கா என்பது தெரிய வந்தது. மற்றொரு நக்சலைட் படுகாயத்துடன் மீட்கப்பட்டார். மருத்துவமனையில் சேர்க்கப் பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களிடம் இருந்த ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

’’இவர்கள்தான், கடந்த 9 ஆம் தேதி பாஜக எம்.எல்.ஏ, பீமா மாண்டவியை சுட்டுக்கொன்ற நக்சலைட்டுகள். அந்தப் பகுதியில் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப் பட்டுள்ளது’’ என்று டெபுடி ஐ.ஜி சுந்தர்ராஜ் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com