காங்கோவில் பயங்கர கலவரம் - இரண்டு இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

காங்கோவில் பயங்கர கலவரம் - இரண்டு இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
காங்கோவில் பயங்கர கலவரம் - இரண்டு இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

காங்கோ நாட்டில் போராட்டக்காரர்கள் நடத்திய தாக்குதலில் இரண்டு இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் நூற்றுக்கும் மேற்பட்ட வெவ்வேறு கிளர்ச்சி அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. காங்கோ அரசை கவிழ்த்து தங்கள் கொள்கைகளை பறைசாற்றும் அரசை நிறுவ வேண்டும் என ஒவ்வொரு அமைப்பும் முயற்சித்து வருகின்றன. இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் ராணுவத்தினர் மீதும், பொதுமக்கள் மீதும் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் ஆயிரக்கணக்கான ராணுவத்தினரும், அப்பாவி பொதுமக்களும் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே, இந்த கிளர்ச்சி அமைப்புகளை ஒடுக்குவதற்காகவும், பொதுமக்களை பாதுகாப்பதற்காகவும் ஐ.நா. சார்பில் காங்கோவுக்கு அமைதிப் படை அனுப்பி வைக்கப்பட்டது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் இந்த அமைதிப் படையில் அங்கம் வகிப்பர். இதில் 70 முதல் 74 பிஎஸ்எஃப் (இந்திய எல்லை பாதுகாப்புப் படை) வீரர்களும் உள்ளனர்.

அமைதிப் படைக்கு எதிராக போராட்டம்

இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கோவில் இந்த ஐ.நா. அமைதிப் படையினர் இருந்தபோதிலும், கிளர்ச்சி அமைப்புகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் கிளர்ச்சி அமைப்புகளின் வெறியாட்டமும் தொடர்ந்து கொண்டே வருகிறது.

இதன் காரணமாக அதிருப்தி அடைந்த காங்கோ மக்கள், ஐ.நா. அமைதிப் படையினருக்கு எதிராக போராட்டம் நடத்தி வந்தனர். சமீபகாலமாக இந்தப் போராட்டம் வன்முறையாக மாறி வருகிறது.

பிஎஸ்எஃப் வீரர்கள் பலி

அந்த வகையில், நேற்று வடக்கு கீவ் மாகாணத்தில் உள்ள கோமா, பேனி, புடெம்போ உள்ளிட்ட நகரங்களில் நடந்த பொதுமக்களின் போராட்டம் பயங்கர கலவரமாக மாறியது. அப்போது போராட்டக்காரர்கள் ஐ.நா. அமைதிப் படை முகாம்கள் மீது பெட்ரோல் குண்டுகள், கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் 15 பேர் உயிரிழந்தனர். இவர்களில் இரண்டு ஐ.நா. காவல்துறை அதிகாரிகள், இரண்டு இந்திய பிஎஸ்எப் படை வீரர்கள், ஒரு அமைதிப் படை வீரர் ஆகியோர் அடங்குவர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்தக் கலவரத்தை அடுத்து அங்கு ஆயிரக்கணக்கான காங்கோ ராணுவத்தினரும், போலீஸாரும் சென்று போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர்.

ஐ.நா. கண்டனம்

இந்த சம்பவத்துக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஐ.நா. அமைதிப் படையினர் மீது நடத்தப்படும் தாக்குதல் போர்க்குற்றம் எனக் கூறியுள்ள அவர், இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது காங்கோ அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com