’பேப்பர்ல இருக்கு.. நிஜத்துல?’ | 1,906 கழிப்பறைகள் கட்டியதாக போலி ஆவணங்கள்.. குஜராத்தில் மெகா ஊழல்!
இன்று உலகம் முழுவதுமே ஊழல் தலைவிரித்தாடுகிறது. இந்தியாவிலும் சொல்ல வேண்டியதில்லை. எல்லா மாநிலங்களிலும், எல்லாத் துறைகளிலும் ஊழல் அதிகரித்திருப்பதாக அவ்வப்போது வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், குஜராத்தில் வீடுகளில் கழிப்பறைகள் கட்டப்பட்டதாகக் கூறி, போலி விண்ணப்பங்கள் மூலம், அரசுக் கருவூலத்திலிருந்து ரூ.2 கோடி ஊழல் செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
குஜராத்தின் பரூச் மாவட்டத்தில், ஆனந்த் கடி கிராமோதியோக், நவ்சேத்னா விகாஸ், கம்தார் கல்யாண் மண்டல், மகாத்மா காந்தி கிராமநிர்மாண் மற்றும் வசுந்தரா சர்வஜனிக் ஆகிய அறக்கட்டளைகள் மூலம் 1,906 வீடுகளில் கழிப்பறைகளை கட்டியுள்ளதாக நகராட்சி அளித்த தகவல் தெரிவிக்கிறது. ஆனால், இங்கு ஒருபோதும் கழிப்பறைகள் கட்டப்படவில்லை என ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர் பிரவீன் மோடி, தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) மூலம் தெரிய வந்திருப்பதாகப் புகார் அளித்துள்ளார்.
அங்கலேஷ்வர் நகராட்சியில் திருமணச் சான்றிதழ்களைப் பெறுவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் கழிப்பறைகளுக்கான நிதி ஒதுக்கீட்டிற்கு விண்ணப்பிக்கப் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. மேற்கண்ட ஐந்து நிறுவனங்களும் சில அரசு அதிகாரிகளும் இந்த ஊழலில் ஈடுபட்டிருக்கலாம் என்று மோடி கூறுகிறார்.
இதுகுறித்து அவர் டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்துள்ள பேட்டியில், “குஜராத் நகராட்சி நிதி வாரியம் மற்றும் பிற அரசுத் திட்டங்களிலிருந்து நிதியைப் பெறுவதற்காக 2014-2015ஆம் ஆண்டில் கழிப்பறைகள் கட்டப்பட்டதாக எனக்கு தகவல் கிடைத்தது. சில மாதங்களுக்கு முன்பு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் அங்கலேஷ்வர் நகராட்சியிடம் விவரங்களைக் கேட்டேன். அங்கலேஷ்வரில் பெரிய வீடுகள் மற்றும் பங்களாக்கள் வைத்திருப்பவர்கள் கழிப்பறைகள் கட்டுவதற்கு உதவி பெற்றதாகக் காட்டப்பட்டதைக் கண்டு நான் அதிர்ச்சியடைந்தேன். நான் அவர்களைத் தொடர்பு கொண்டபோது, அவர்கள் ஒருபோதும் உதவிக்கு விண்ணப்பிக்கவில்லை என்று கூறினர்.
பட்டியலில் நிதியளிக்கப்பட்ட 1,906 கழிப்பறைகளில், பல வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த இரண்டு வெவ்வேறு குடும்பங்களுக்கு ஒதுக்கப்பட்டதாகக் காட்டப்படுகின்றன. வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த குடும்பங்கள் ஒரே வீடு அல்லது கட்டடத்தில் எப்படி வாழ முடியும்? அதன் ஒதுக்கீட்டின் அடிப்படையில் இந்த மோசடி நடைபெற்றுள்ளதாகத் தெரிகிறது. இந்த மோசடியைச் செய்ய மக்களின் ஆவணங்கள் திருடப்பட்டுள்ளன. இதுகுறித்து அனைத்துத் தரப்பிலும் புகார் அளிப்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.