சசிகலாவுக்காக ரூ.2 கோடி கைமாறியது இப்படித்தானாம்!
சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்க ரூ.2 கோடி கைமாறியது எப்படி என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் அவருக்கு சிறப்பு சலுகைகள் வழங்க, ரூ.2 கோடி கைமாறியதாக சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா குற்றம் சாட்டினார். இது பரபரப்பானதை அடுத்து ரூபா டிரான்ஸ்பர் செய்யப்பட்டார். சிறைத்துறை டிஜிபி சத்யநாராயண ராவ் காத்திருப்போர்
பட்டியலில் இருக்கிறார். இந்நிலையில் இந்த பணம் எப்படி கைமாறியது என்பது பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரட்டை இலை சின்னத்தை மீட்கும் விவகாரத்தில் ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டி.டி.வி.தினகரன், அவர் நண்பர் மல்லிகார்ஜூனா மற்றும் இடைத்தரகர்களை டெல்லி போலீசார் கைது செய்தனர். இதில் மல்லிகார்ஜூனாவின் போனை ஆய்வு செய்தபோது அவர் கர்நாடக முன்னாள் அமைச்சர் பரமேஸ்வரின் உதவியாளர் பிரகாசிடம் அடிக்கடி பேசி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்தினர். அவர், பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்க, ரூ.2 கோடி லஞ்சம் கொடுப்பது தொடர்பாக தன்னிடம் பேசியதாகக் கூறினார்.
பிரகாஷ் உதவியுடன் பரமேஸ்வரின் நண்பர் மூலம் சிறை அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி ஹவாலா முறையில் கைமாறியுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதன் தொடர்ச்சியாகத் தான் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பான வங்கி கணக்குகள், ஆவணங்களும் சிக்கி இருப்பதாகவும் அவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.