காருக்குள் விளையாடியபோது 'லாக்' ஆன கதவு: மூச்சுத்திணறி 2 சிறுவர்கள் உயிரிழப்பு
உத்தரப் பிரதேசத்தில் விளையாடிக் கொண்டிருந்த 4 சிறுவர்கள் காருக்குள் அமர்ந்து கதவை மூடிக்கொண்டதில் இருவர் மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் மொரதாபாத்தில் உள்ள முந்தா பாண்டே பகுதியில் 4 சிறுவர்கள் விளையாடிக் கொண்டு இருந்துள்ளனர். 4 முதல் 7 வயதிற்குட்பட்ட அனைவரும் காருக்குள் அமர்ந்து விளையாடியபோது காரின் கதவு தானாகவே லாக் ஆனதாக தெரிகிறது. அருகில் யாரும் இல்லாத நிலையில் காருக்குள் சிக்கியவர்கள் மூச்சித்திணறி மயங்கியுள்ளனர்.
பின்னர் காருக்குள் மயக்க நிலையில் இருந்த சிறுவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அதில் இரண்டு பேர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மற்ற இருவரும் தீவிர சிகிச்சையில் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். காருக்குள் சிக்கி சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

