காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்படும் முன் மத்திய அரசு போட்ட ‘மாஸ்டர் பிளான்’
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதற்கு முன்பே பாதுகாப்பு ஏற்பாடுகளில் மத்திய அரசு சில யுக்திகளை கையாண்டுள்ளது.
சுதந்திரம் பெற்றது முதல் நீடித்து வந்த ஜம்மு- காஷ்மீரின் நிலையில் மத்திய அரசு அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது. சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப்பிரிவை ரத்து செய்ததுடன், காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் அறிவித்திருக்கிறது. அதன்படி, இனி ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தவருக்கு ஒற்றைக் குடியுரிமை மட்டுமே இருக்கும். இதற்கு முன், சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பிரச்னைகளை காரணம் காட்டி சட்டப்பிரிவு 356ஐ பயன்படுத்தி ஜம்மு- காஷ்மீர் மாநில அரசை கலைக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு கிடையாது. இனி சட்டப்பிரிவு 356ஐ பயன்படுத்தி காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த முடியும்.
சிறப்பு அந்தஸ்து இருந்தபோது ஜம்மு-காஷ்மீரில் சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு கிடையாது என்ற நிலை இருந்தது. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதால் சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு உறுதி செய்யப்படுகிறது. இந்தியாவின் மற்ற பகுதிகளில் வசிப்பவர்கள் காஷ்மீரில் நிலமோ அல்லது சொத்தோ வாங்க முடியாது என்ற கட்டுப்பாடு இருந்தது. இனி மற்ற மாநிலத்தவர்களும் காஷ்மீரில் நிலம் வாங்கலாம்.
சிறப்பு அந்தஸ்தின்கீழ், காஷ்மீரில் குடியுரிமை பெற்ற பெண்கள், வெளிமாநிலத்தவரை மணக்கும் பட்சத்தில் மாநில குடியுரிமையை இழப்பர் என்ற நிலை இருந்தது. இனி பிற மாநிலத்தவரை மணந்தாலும் குடியுரிமையை இழக்க மாட்டார்கள். இதற்கு முன் தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திற்கு பொருந்தாது. ஆனால் 370 சட்டப்பிரிவு நீக்கப்படுவதன் மூலம் இனி அந்த மாநிலத்திலும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் பொருந்தும். இதேபோன்று ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவையின் ஆயுட் காலம் 6 ஆண்டுகள் என இருந்தது இனி 5 ஆண்டுகளாக மாற்றப்படுகிறது.
இந்த நடவடிக்கை பல்வேறு கட்ட எதிர்ப்புகளுக்குப் பிறகு மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது. அதேசமயம் இந்த அறிவிப்பால் காஷ்மீரில் கலவரங்கள் வெடிக்கலாம் என்பதால் அதற்கான முன்னேற்பாடுகளையும் மாஸ்டர் பிளான் போட்டு மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இதற்காக ஜம்மு-காஷ்மீர் பகுதியில் கடந்த சில வாரங்களில் கூடுதலாக 35 ஆயிரம் பாதுகாப்பு படை வீரர்களை உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, இந்திய ராணுவம் செய்துள்ளது.
அதுமட்டுமின்றி காஷ்மீரில் செல்போன் இணைப்புகள் மற்றும் இண்டர்நெட் சேவை துண்டிக்கப்படுவதற்கு முன்பே, 2000 சாட்டிலைட் போன்கள் பாதுகாப்புப் படைக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இதுதவிர முழுவதும் கண்காணிக்க ஏராளமான ட்ரோன்கள் களமிறக்கப்பட்டிருக்கின்றன. அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்ட பின்னரே மாநில அந்தஸ்து ரத்து மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிப்பது ஆகிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.