சீக்கியர்களுக்கு எதிரான கலவரம்: ம.பி.முதல்வர் கமல்நாத் மீது மீண்டும் விசாரணை!
சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில், மத்திய பிரதேச முதலமைச்சர் கமல்நாத்திடம் மீண்டும் விசாரணை நடத்தப்பட இருக்கிறது.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984-ஆம் ஆண்டு தனது பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதையடுத்து சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் நடந்தது. இதில் 3325 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். டெல்லியில் மட்டும் 2733 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். காங்கிரஸைச் சேர்ந்த ஜெகதீஷ் டைட்லர், சஜ்ஜன் குமார் மற்றும் கமல்நாத் ஆகியோர்தான் இந்தக் கலவரத்தைத் தூண்டிவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது. சஜ்ஜன் குமாருக்கு கடந்த ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப் பட்டது.
தற்போது மத்திய பிரதேச முதலமைச்சர் கமல்நாத் தனக்கும் சீக்கிய கலவரத்துக்கும் தொடர்பில்லை என்று மறுத்துவந்தார். இந்நிலையில் சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் அவருக்குள்ள தொடர்பு பற்றிய வழக்கு விசாரணையை, சிறப்பு புலனாய்வு குழு மீண்டும் தொடங்குகிறது.
இதுபற்றி டெல்லி எம்.எல்.ஏ மஜிந்தர் சிங் சிர்சா கூறும்போது, ‘’அப்போது நடந்த கலவரத்தின்போது எப்.ஐ.ஆரில் கமல்நாத் தின் பெயர் இல்லை. ஆனால், இந்த கலவரத்தில் ஈடுபட்ட 5 பேருக்கு அவர் அடைக்கலம் கொடுத்துள்ளார். ஆதாரமில் லாமல் அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அப்போது கிரைம் செய்தியாளராக பணியாற்றிய சஞ்சய் சூரி, கமல்நாத் ஒரு கும்பலுடன் இருந்ததை பார்த்ததாகத் தெரிவித்துள்ளார்.
அவர் இப்போது இங்கிலாந்தில் இருக்கிறார். இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு குழு மீண்டும் விசாரிக்க உள்ளதால், அழைத்தால் விசாரணைக்கு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். மற்றொரு சாட்சியான, பீகாரைச் சேர்ந்த முக்தியார் சிங்கும் விசாரணைக்கு வந்து கலவரத்தில், கமல்நாத்தின் பங்கு பற்றி தெரிவிக்கத் தயாராக உள்ளார்’ என்று கூறியுள்ளார்.