1984 சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு.. காங்கிரஸ் முன்னாள் எம்.பி. குற்றவாளி!
கடந்த 1984ஆம் ஆண்டு டெல்லியில் முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் படுகொலைக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக சீக்கியா்களுக்கு எதிராக வன்முறை வெடித்தது. கொடிய ஆயுதங்களுடன் பெரிய அளவிலான கொலை, தீவைப்பு, சீக்கியா்களின் சொத்துக்களை அழித்தல் ஆகியவை நிகழ்ந்தன.
இந்த கலவரத்தின்போது சரஸ்வதி விஹாா் பகுதியைச் சோ்ந்த ஜஸ்வந்த் சிங் மற்றும் அவரது மகன் தருண்தீப் சிங் ஆகியோர் கொல்லப்பட்டு அவா்களது வீட்டுக்கு தீ வைக்கப்பட்டது. இந்த கலவரம் முன்னாள் காங்கிரஸ் எம்.பி. சஜ்ஜன் குமார் தலைமையில் நடைபெற்றதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடா்பாக டெல்லி காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை மேற்கொண்டது.
கடந்த 2021-ஆம் ஆண்டு சஜ்ஜன் குமாருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை பதிவு செய்த உயா்நீதிமன்றம், போதுமான ஆதாரங்கள் இருப்பதால் வழக்கை விசாரிக்க ஒப்புக்கொண்டது. இந்த வழக்கின் இறுதி விசாரணை நடைபெற்று நிறைவடைந்த நிலையில், சஜ்ஜன் குமார் குற்றவாளி என டெல்லி நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
சஜ்ஜன் குமாருக்கான தண்டனை குறித்த விவரங்கள் வருகிற பிப்ரவரி 18 அன்று வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, சஜ்ஜன் குமார் திகார் சிறையில் இருந்தபடியே காணொளி வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டார்.