கலைத்த ‘கரு’வுடன் புகார் அளித்த இளம்பெண் - ஷாக் ஆன போலீசார்
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான இளம் பெண், கலைக்கப்பட்ட கருவுடன் காவல்நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம், அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள ஹசன்பூர் கொட்வாலி பகுதியைச் சேர்ந்தவர் அந்த இளம் பெண். இன்று தனது தாயுடன் ஹசன்பூர் காவல் நிலையத்திற்கு வந்துள்ளார். தன்னை ஒருவன் பாலியல் வன்கொடுமை செய்து விட்டதாக புகார் அளித்த அவர், அதற்கு ஆதாரமாக தன்னுடைய பேக்கில் வைத்திருந்த கலைக்கப்பட்ட கருவை போலீசிடம் கொடுத்துள்ளார். போலீசார் அதனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அந்த புகாரில், “எனது வீட்டிற்கு அருகில் உள்ள இளைஞர் என்னை துப்பாக்கி முனையில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனை யாரிடமும் கூறக் கூடாது என்று என்னை மிரட்டினார். வேறு யாரிடமும் கூறினால் விளைவுகள் வேறுமாதிரியாக இருக்கும் என்று கூறினார். அதற்கு பயந்து நான் யாரிடமும் கூறவில்லை. ஆனால், நான் கர்ப்பமானதால் எனக்கு பயம் அதிகரித்தது. இதுகுறித்து அந்த இளைஞரிடம் கூறினேன். அவர் கடந்த ஜூன் 13ம் தேதி எனக்கு சில மருந்துகளை கொடுத்தார்.
அந்த மருந்துகளை எடுத்துக் கொண்ட பின்னர் எனது உடல்நிலை மோசமானது. கடந்த வெள்ளிக்கிழமை எனக்கு அபாஷன் ஆனது. அப்போது எனது வீட்டிற்கு எப்படியோ தெரிந்துவிட்டது. அவர்களிடம் எல்லா விஷயத்தையும் கூறினேன். என்னை பாலியல் வன்கொடுமை செய்த அந்த இளைஞருக்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இளம்பெண்ணின் குடும்பத்தார் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அந்த பெண் அளித்த கருவை சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதேபோன்ற ஒரு சம்பவம் கடந்த மே 19ம் தேதி நடைபெற்றது. 14 வயதான சிறுமி தனது கலைக்கப்பட்ட கருவை பையில் எடுத்துக் கொண்டு மாவட்ட எஸ்.பியிடம் புகார் அளித்தார். அப்பொழுது தன்னுடைய பக்கத்து வீட்டு இளைஞர்கள் இருவர் மீது தான் அவர் புகார் அளித்து இருந்தார்.