உ.பி. தேர்தல் பணியில் 18,000 பாதுகாப்புப் படைவீரர்கள் - மத்திய உள்துறை அமைச்சகம்

உ.பி. தேர்தல் பணியில் 18,000 பாதுகாப்புப் படைவீரர்கள் - மத்திய உள்துறை அமைச்சகம்

உ.பி. தேர்தல் பணியில் 18,000 பாதுகாப்புப் படைவீரர்கள் - மத்திய உள்துறை அமைச்சகம்

உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, 18,000 பாதுகாப்பு படை வீரர்கள் தேர்தல் பணிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

நாட்டிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான உத்தரப்பிரதேசத்தில், வரும் பிப்ரவரி 10-ம் தேதி முதல் மார்ச் 7-ம் தேதி வரை, 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, மார்ச் 10-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்த, மத்திய உள்துறை அமைச்சகம் பதினெட்டாயிரம் பாதுகாப்பு படை வீரர்களை அந்த மாநிலத்தில் தேர்தல் பணிகளுக்காக அனுப்பி வைத்துள்ளது. மேலும் 9 ஆயிரம் பாதுகாப்பு படை வீரர்கள், இந்த வாரம் உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள் என உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. 

உத்தரபிரதேச மாநில போலீசாருடன் இணைந்து, சி.ஆர்.பி.எஃப்., ஐ.டி.பி.பி., சி.ஐ.ஏ.எப்., மற்றும் எஸ்.எஸ்.பி. ஆகிய துணை ராணுவங்களை சேர்ந்த மொத்தம் இருபத்தி ஏழாயிரம் வீரர்கள் ஆரம்பகட்டத்தில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் பதட்டமான தொகுதிகளை கண்டறிந்து கூடுதல் பாதுகாப்புப் படை வீரர்கள் தேவை என தேர்தல் ஆணையம் தெரிவித்தால், உடனடியாக அந்த உத்தரவை பின்பற்றும்படி, துணை இராணுவங்களை சேர்ந்த அதிகாரிகளை உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

ஆரம்பக்கட்ட பாதுகாப்புப் பணிகளில் மத்திய துணை ராணுவத்தை சேர்ந்த 225 குழுக்கள் ஈடுபடவுள்ளதாகவும் உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறியுள்ளன. இதற்கான உத்தரவுகளை மத்திய உள்துறை அமைச்சகம், ஏற்கனவே தேர்தல் ஆணைய ஆலோசனைப்படி, துணை ராணுவங்களின் தலைவர்களுக்கு அனுப்பியுள்ளது. இருபத்தி ஏழாயிரம் வீரர்கள் உத்தரப்பிரதேச மாநிலத்தை சென்றடைய ஏற்பாடுகள் செய்யும்படி ரயில்வே துறையினருக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. இவர்கள் தங்குவதற்கான முகாம்களுக்கான ஏற்பாட்டை உத்தரப்பிரதேச அரசு ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்துள்ளது.

எந்தெந்த தொகுதிகளில் இந்தப் பாதுகாப்புப் படை வீரர்கள் பணியில் ஈடுபடுவார்கள் என்பதை தேர்தல் ஆணையம் மற்றும் உத்தரப்பிரதேச மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள். ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறுவதால், முதல் கட்டத்தில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் வீரர்கள் பின்னர் வேறு கட்டங்களில் வாக்குப் பதிவு நடைபெறும் இடங்களுக்குச் சென்று அங்கே பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com