17 வயது சிறுமியின் விருப்பத்தை நிறைவேற்றிய ரச்சகொண்டா நகர காவல் ஆணையர் 

17 வயது சிறுமியின் விருப்பத்தை நிறைவேற்றிய ரச்சகொண்டா நகர காவல் ஆணையர் 
17 வயது சிறுமியின் விருப்பத்தை நிறைவேற்றிய ரச்சகொண்டா நகர காவல் ஆணையர் 

தெலங்கானா ரச்சகொண்டா நகரத்தின் காவல் ஆணையர் 17 வயது சிறுமி ஒருவரின் விருப்பத்தை நிறைவேற்றி உள்ளார். 

தெலங்கானாவில் உள்ள ரச்சகொண்டா பகுதியை சேர்ந்தவர் நரசிம்மா. இவரது மகள் ரம்யா(17) ஒரு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இரத்த புற்றுநோயால் அவதிப்பட்டு வரும் ரம்யா, ஹைதராபாத்திலுள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவருக்கு ஒருநாள் ரச்சகொண்டா நகர காவல் ஆணையராக வேண்டும் என்ற ஆசை இருந்தது.  

இதனைத் தெரிந்து கொண்ட ஒரு தனியார் அமைப்பு ரச்சகொண்டா நகர காவல் ஆணையர் மகேஷ் பக்வத் ஐபிஎஸ் இடம் தெரியப்படுத்தியுள்ளது. இதனையடுத்து அவர் ரம்யாவை அழைத்து இன்று ஒருநாள் மட்டும் ரச்சகொண்டா காவல் ஆணையராக பணியாற்ற வைத்தார். இதன்மூலம் அச் சிறுமியின் ஆசையை நிறைவேற்றியும் வைத்தார். ரச்சகொண்டா நகரத்தின் ஒருநாள் காவல் ஆணையராக பதவியேற்ற ரம்யா நகரத்தின் சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் கொண்டு வருவதாகவும், காவல்துறைக்கும் மக்களுக்கும் இடையே நல்ல உறவை ஏற்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தார். 

மேலும் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ரச்சகொண்டா மாநில காவல் ஆணையராக நான் பதவியேற்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஒருநாள் காவல் ஆணையரான நான் ரச்சகொண்டா பகுதியில் நடைபெறும் குற்றங்களை தடுப்பேன். அத்துடன் சட்ட ஒழுங்கு தொடர்பான குற்றங்கள் மற்றும் பெண்கள் தொடர்பான குற்றங்களை நான் தடுப்பேன். ‘பெண்கள் காவல் படை’யின் ரோந்து பணியை நான் அதிகரிப்பேன்” எனத் தெரிவித்தார். 

ரச்சகொண்டா நகர காவல்துறை ஒருநாள் காவல் ஆணையர் என்ற ஆசையை நிறைவேற்றுவது இது இரண்டாவது முறையாகும். ஏற்கெனவே கடந்த 2017ஆம் ஆண்டு எசான் என்ற சிறுவனின் ஒருநாள் காவல் ஆணையர் ஆசையை நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.   

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com