ஹைதராபாத்| திடீரென ஏற்பட்ட பயங்கர தீ விபத்து... 8 குழந்தைகள் உட்பட 17 பேர் பலி!
கடந்த 19 ஆம் தேதியன்று, காலை தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரின் சார்மினார் பகுதியில் குல்சார் ஹவுஸ் அருகே தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 17 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதில் 8 குழந்தைகளும் அடங்குவர்.
தெலங்கானாவின் தீ பேரிடர் மீட்பு அவசரநிலை மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புத் துறை வெளியிட்ட அறிக்கையின்படி, ''காலை 6.15 மணி அளவில் தீ விபத்து தொடர்பாக தீயணைப்புத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. தீ விபத்துக்குள்ளான இடம் இரண்டு மாடி கட்டடம். தரைத்தளத்தில் பரவிய தீ முதல் தளத்துக்கும் பரவி உள்ளது'' என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷார்ட் சர்க்யூட் காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
உயிரிழந்தவர்கள்:
தீ விபத்தில் உயிரிழந்த 8 குழந்தைகள் உட்பட 17 பேரின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் உயிரிழந்த குழந்தைகள் அனைவரும் 10 வயதுக்கு கீழே உள்ளவர்கள்.
பிரஹலாத் (70), முன்னி (70), ராஜேந்தர் மோடி (65), ஸ்முத்ரா (60), ஷீத்தல் (35), வர்ஷா (35), பங்கஜ் (36), ரஜினி (32) ஆகியோர் அடங்குவர். ஹமேய் (7), இட்டு (4), ரிஷாப் (4), பிரியான்ஷ் (4), அனுயான் (3), அருஷி (3), இராஜ் (2), பிரதம் (1).
முதல்வர் ரேவந்த் ரெட்டி இரங்கல்:
பழைய ஹைதராபாத் நகரின் குல்சார் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஆழ்ந்த இரங்கலை பதிவு செய்துள்ளார். தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்கும், காயம்பட்டவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றி சிறப்பான சிகிச்சை கிடைக்க ஏற்பாடு செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக பேசிய முதல்வர் ரேவந்த் ரெட்டி, தனது இரங்கலை தெரிவித்தார். மேலும், அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்றும் உறுதியளித்தார்.
ரூ.5 லட்சம் நிவாரணம்!
குல்சார் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதி அளிக்கப்படும் என்று தெலங்கானா துணைமுதல்வர் பட்டி விக்ரமார்க மல்லு அறிவித்துள்ளார்.