உ.பி. | பிறந்த குழந்தைகள் 17 பேருக்கு ‘சிந்தூர்’ எனப் பெயர்!
செய்தியாளர்: இந்து
காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் தீடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தீவிரவாத தாக்குதலில் ராணுவ வீரர்கள் உட்பட 26 இந்தியர்கள் உயிரிழந்தனர்.
ஆபரேஷன் சிந்தூர்:
பாகிஸ்தானின் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக “ஆபரேஷன் சிந்தூர்” என்னும் பெயரில் பாகிஸ்தான் மீது மே 7ஆம் தேதி இந்தியா தாக்குதல் நடத்தியது. “ஆபரேசன் சிந்தூர்” என்பது பாகிஸ்தான் தீவிரவாதிகளின் தாக்குதலால் பலர் உயிரிழந்த நிலையில் பல பெண்களின் குங்குமங்கள் கலைக்கப்பட்டுள்ளன. இதற்கு பதலடி கொடுக்கும் வகையில் இந்த ஆபரேசன் நடத்தப்படுவதால், அதற்கு “ஆபரேசன் சிந்தூர்” எனப் பெயரிடப்பட்டது என இந்திய ராணுவம் விளக்கம் கொடுத்தது. பாகிஸ்தானின் 9 தீவிரவாத முகாம்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள் உயிரிழந்ததாக இந்தியா தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
பிறந்த குழந்தைகளுக்கு ‘சிந்தூர்‘ எனப் பெயர்:
உத்தரப்பிரதேசம் மாநிலம் குஷிநகர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மே 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் பிறந்த 17 குழந்தைகளுக்கு “சிந்தூர்” என பெற்றோர்கள் பெயரிட்டுள்ளதாக மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் ஆர்.கே.ஷகி தெரிவித்துள்ளார். பாகிஸ்தானிற்கு பதிலடி கொடுக்கும் இந்திய ராணுவத்தின் “ஆபரேசன் சிந்தூர்” நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்டு தங்களது பிறந்த குழந்தைகளுக்கு “சிந்தூர்” என பெயரிட்டுள்ளதாக பெற்றோர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து “சிந்தூர்” என பெயரிடப்பட்ட ஒரு பெண் குழந்தையின் தாயார் அர்ச்சனா, “பஹல்காம் தாக்குதலில் பல பெண்கள் தங்களது கணவர்களை இழந்துள்ளனர். அதற்கு பதிலடியாகவே ‘ஆபரேசன் சிந்தூர்’ இந்திய ராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டது. அது குறித்து நாங்கள் பெருமைப்படுகிறோம். சிந்தூர் என்பது வெறும் வார்த்தை அல்ல, அது ஒரு உணர்ச்சி. அதனால் ‘சிந்தூர்’ என எங்கள் பெண் குழந்தைக்கு பெயரிட்டுள்ளோம்” என கருத்துத் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேசம் மாநிலம் பத்ரூனா பகுதியை சேர்ந்த மதன் குப்தா தனது பேத்திக்கு “சிந்தூர்” எனப் பெயரிட்டுள்ளார். “எனது மகள் வளர்ந்து வரும்போது, அவரது பெயருக்கான உண்மையான அர்த்தத்தை உணர்ந்து தாய் நாட்டின் கடமையை அறிவார்” என பதாகி பாபு கிராமத்தைச் சேர்ந்த வியாசமுனி தெரிவித்துள்ளார்.
இந்திய ராணுவத்தினரின் “ஆபரேசன் சிந்தூர்” நடவடிக்கையால் ஈர்க்கப்பட்டு பிறந்த குழந்தைகளுக்கு “சிந்தூர்” எனப் பெயரிட்டுள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது