ரூ.200 கோடியில் ஆடம்பர திருமணம்: துபாயில் பங்கேற்ற 17 பிரபலங்களிடம் அமலாக்கத் துறை விசாரணை?!

மகாதேவ் சூதாட்ட செயலி தொடர்பாக 17 பிரபலங்களை அமலாக்கத்துறை விசாரிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
செளரப் சந்திரகர் திருமணம், ED விசாரணை
செளரப் சந்திரகர் திருமணம், ED விசாரணைகோப்புப் படம்

மகாதேவ் சூதாட்ட செயலியின் உரிமையாளரான சௌரப் சந்திரகர், இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் துபாயில் திருமணம் செய்துகொண்டார். அமலாக்க இயக்குநரகத்தின் கூற்றுப்படி, சௌரப் தனது திருமணத்திற்காக 200 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாகவும், இந்தத் தொகையின் பெரும்பகுதி துபாய் திருமணத்தில் கலந்துகொண்டு நிகழ்ச்சி நடத்திய பாலிவுட் பிரபலங்களுக்குச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

திருமணத்தில், நாக்பூரிலிருந்து துபாய்க்கு குடும்ப உறுப்பினர்களை அழைத்துச் செல்ல தனியார் விமானங்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டன. அதுபோல் பாலிவுட் பிரபலங்கள் முதல் திருமண ஏற்பாட்டாளர்கள் வரை அனைவரும் மும்பையில் இருந்து துபாய்க்கு விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதற்குத் தேவையான பணம் முழுவதும் ஹவாலா முறையில் கொடுக்கப்பட்டிருக்கிறது. திருமணத்துக்கான ஏற்பாடுகளைக் கவனித்துக்கொண்ட நிறுவனம் ஒன்றுக்கு, ஹவாலா முறையில் ரூ.112 கோடி கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், இந்த திருமணத்தில் டைகர் ஷ்ராஃப், சன்னி லியோன், பாடகி நேஹா கக்கர் ஆகியோரின் பங்கேற்றனர். இந்த நிலையில், சௌரப் சந்திரகர் மற்றும் அவரது தொழில் கூட்டாளி ரவி உப்பல் ஆகியோர் மீது 5,000 கோடி ரூபாய் பணமோசடி குற்றச்சாட்டு குறித்து அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.

இதுதொடர்பாக நேற்று போபால், மும்பை மற்றும் கொல்கத்தாவில் இருந்து 417 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத் துறை பறிமுதல் செய்துள்ளது. தவிர, வரும் 18ஆம் தேதி துபாயில் மொபைல் ஆப் வெற்றி விழா நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கான ஏற்பாடுகளைக் கவனிக்க தனியார் நிறுவனம் ஒன்றுக்கு ரூ.40 கோடி கொடுக்கப்பட்டிருப்பதையும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணையில் கண்டுபிடித்திருக்கின்றனர். இதன் அடிப்படையில் 17 பாலிவுட் பிரபலங்களை விசாரணைக்கு அழைக்க அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக சட்டீஸ்கரைச் சேர்ந்த சூதாட்ட மொபைல் ஆப் உரிமையாளர் சவுரப் சந்திரகர் மற்றும் அவரது கூட்டாளியையும் அமலாக்கத் துறை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

ED
EDFile image

சவுரப் சந்திரகரின் சூதாட்ட மொபைல் ஆப்பில் மட்டும் கடந்த ஆண்டில் ஒரு மில்லியன் நபர்கள் பந்தயம் கட்டியுள்ளனர். இந்த செயலி, சுமார் 30 மையங்களில் இருந்து இயக்கப்படுகிறது. இதை விளம்பரப்படுத்தும் YouTube வீடியோக்களில் பாலிவுட் பிரமுகர்கள் சிலர் உள்ளனர். செயலியின் விளம்பரங்களில் இடம்பெற்ற பாலிவுட் பிரமுகர்களின் பெயர்களை அமலாக்கத் துறை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. ஆனாலும் அதன் லிஸ்ட்டில் 17 பேர் இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com