அநாகரிகமாக நடந்து கொள்ளும் அதிகாரிகள்? - உ.பி.-யில் 16 மருத்துவர்கள் திடீர் ராஜினாமா

அநாகரிகமாக நடந்து கொள்ளும் அதிகாரிகள்? - உ.பி.-யில் 16 மருத்துவர்கள் திடீர் ராஜினாமா
அநாகரிகமாக நடந்து கொள்ளும் அதிகாரிகள்? -  உ.பி.-யில் 16 மருத்துவர்கள் திடீர் ராஜினாமா

கொரோனா காலத்தில் கடுமையான வேலைப்பளுவுக்கு மத்தியில் தண்டனை உத்தரவுகள், அநாகரிகமான நடத்தை மற்றும் நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகளின் ஒத்துழையாமைக்கு உட்படுத்தப்படுவதாக கூறி உத்தரபிரதேசத்தில் 16 மருத்துவர்கள் ராஜினாமா செய்திருக்கும் சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் ஆரம்ப மற்றும் சமூக சுகாதார மையங்களில் பணியாற்றி வந்த 16 மருத்துவர்கள் கூட்டாக ராஜினாமா செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொரோனா பெருந்தொற்று காலத்தில் அதிகப்படியான வேலைப்பளுவில் இருந்து வருபவர்கள் முன்களப் பணியாளர்களான மருத்துவர்களும் செவிலியர்களும் தான். இப்படியான வேலைப்பளுவுக்கு மத்தியில் தண்டனை உத்தரவுகள், அநாகரிகமான நடத்தை மற்றும் நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகளின் ஒத்துழையாமைக்கு உட்படுத்தப்படுவதாக கூறி இந்த 16 மருத்துவர்களும் ராஜினாமா கடிதத்தை அனுப்பியிருக்கின்றனர்.

இந்த 16 மருத்துவர்களில் 11 பேர் உன்னாவ் மாவட்டத்தில் சமூக சுகாதார மையங்களின் தலைமை மருத்துவராக பணிபுரிந்து வருபவர்கள். மற்ற 5 பேர் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தலைமை மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் அளித்துள்ள ராஜினாமா கடிதத்தில், "தொற்றுநோய் கடமைகளின் போது மருத்துவர்களாகிய நாங்கள் பொறுப்புகளை முழு பக்தியுடன் நிறைவேற்றினாலும், நிர்வாக அதிகாரிகள் சர்வாதிகார அணுகுமுறையை கடைப்பிடித்து தண்டனை உத்தரவுகளை பிறப்பித்து வந்தனர். நிர்வாக அதிகாரிகள் தங்கள் சகாக்கள் மீது எந்த விளக்கமும் விவாதமும் இன்றி தண்டனை நடவடிக்கை எடுத்து வருகின்ற செயல் வருத்தத்தை தருகிறது. அவர்களால் நாங்கள் நடத்தப்படும் விதம் எங்களை அதிருப்திக்குள்ளாக்கியிருகிறது.

கொரோனா பரிசோதனை முதல் தடுப்பூசி போடும் பணி வரை எங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளுக்கு உடனடி இலக்குகள் நிர்வாகத்தினர் மூலம் நிர்ணயிக்கப்படுகிறது. தற்போது நிலவி வரும் சூழ்நிலையில் அதிகபட்ச அக்கறையுடன் தொடர்ந்து நாங்கள் பணி செய்து வருகிறோம். ஆனாலும் எந்த விளக்கமும் கேட்காமல் மேலதிகாரிகள் தண்டனை உத்தரவுகளை பிறப்பிக்கின்றனர். அவர்களின் அநாகரிகமான நடத்தை மற்றும் ஒத்துழையாமை எங்களை தொடர்ந்து பணி செய்யவிடாமல் தடுக்கிறது" என்று குறிப்பிட்டு இருக்கின்றனர்.

இதுதொடர்பாக இந்தியா டுடேவிடம் பேசியுள்ள டாக்டர் சஞ்சீவ் குமார் என்பவர், "அனைத்து பொறுப்பாளர்களும் இந்த வகையான ஒருதலைப்பட்ச நடவடிக்கைகளால் பாதிக்கப்படுகின்றனர். நோயாளிகளுக்கு சேவை செய்யும் போது சில மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் கோவிட் தொற்று காரணமாக இறந்துவிட்டனர். அதை மறந்து இதுபோன்ற நடவடிக்கைகளை அவர்கள் எடுத்து வருகிறார்கள்" என்றுள்ளார்.

மருத்துவர்களின் இந்த ராஜினாமா நடவடிக்கை மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், மாநிலத்தில் உள்ள மற்ற மருத்துவர்கள் மத்தியில் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது. எனினும் ராஜினாமா குறித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், இன்று நடைபெறும் பேச்சுவார்த்தைக்கு பிறகுதான் ஒரு முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com