கடனை திருப்பித்தர முடியவில்லை - கர்ப்பிணி உட்பட 16 பேர் ஒரே அறையில் அடைத்து துன்புறுத்தல்!

கடனை திருப்பித்தர முடியவில்லை - கர்ப்பிணி உட்பட 16 பேர் ஒரே அறையில் அடைத்து துன்புறுத்தல்!
கடனை திருப்பித்தர முடியவில்லை - கர்ப்பிணி உட்பட 16 பேர் ஒரே அறையில் அடைத்து துன்புறுத்தல்!

கர்நாடகாவில் வாங்கிய கடனை திருப்பித் தர இயலாத பட்டியலின குடும்பங்களை அடைத்து வைத்து அடித்து கொடுமைப்படுத்திய காபி தோட்ட உரிமையாளரை போலீசார் கைதுசெய்துள்ளனர். இதில் தனது கருவை இழந்த பெண் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கர்நாடக மாநிலம் சிக்மங்களூரு மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜகதீஷ் கவுடா. ஜேனுகத்தி கிராமத்தில் இவர் காபி தோட்டம் வைத்துள்ளார். இவருடைய தோட்டத்தில் தினக்கூலி வேலை செய்துவந்த பட்டியிலனத்தைச் சேர்ந்த 4 குடும்பம் ஜகதீஷிடம் ரூ. 9 லட்சம் கடன் வாங்கியிருக்கிறது. அதனை திருப்பி செலுத்த முடியாத 4 குடும்பங்களை சேர்ந்த 16 பேரை ஜகதீஷ் கவுடாவும் அவரது மகன் திலக் கவுடாவும் காபி தோட்டத்திலுள்ள அறையில் அடைத்து வைத்து கொடுமைபடுத்தியுள்ளார்.

இதில் சிறுவர்கள் மற்றும் ஒரு கர்ப்பிணியும் அடக்கம். பட்டியலினத்தைச் சேர்ந்த சிலர் தங்கள் உறவினர்களை ஜகதீஷ் அடைத்துவைத்து கொடுமைப்படுத்துவதாக ஆகஸ்ட் 8ஆம் தேதி பாலேஹோன்னூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். ஆனால் மறுநாளே அவர்கள் புகாரை திரும்பப் பெற்றுள்ளனர்.

அதற்கு அடுத்த நாள் கருவை இழந்த கர்ப்பிணி பெண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் ஜகதீஷின் காபி தோட்டத்திற்கு சென்று பார்த்தபோது, அங்கு 8-10 பேர் ஒரே அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்ததை பார்த்துள்ளனர். அதுகுறித்து கேள்வி எழுப்பியபோது, ஜகதீஷ் அவர்களை அடித்து கொடுமைபடுத்தியது தெரியவந்திருக்கிறது.

இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸ் அதிகாரி கூறுகையில், ’’கடந்த 15 நாட்களாக அவர்களை ஒரே அறையில் அடைத்து வைத்துள்ளார். அங்கு 4 குடும்பங்களைச் சேர்ந்த 16 பேர் இருந்தனர். அவர்கள் அனைவரும் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள். புகாரின்படி அவர்கள் அனைவரும் வீட்டுச் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்’’ என்று தெரிவித்தார்.

கருவை இழந்த பெண் அர்பிதா கூறுகையில், நான் ஒருநாள் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டிருந்தேன். நான் அடித்து உதைக்கப்பட்டு, தகாத வார்த்தைகளால் புண்படுத்தப்பட்டேன். அவர் எனது செல்போனையும் பறித்துக்கொண்டார்’’ என்று கூறியுள்ளார். அர்பிதாவின் தந்தை கூறுகையில், ஜகதீஷ் கவுடா எனது மகளையும் அவரது கணவரையும் அடித்து தாக்கினார். இரண்டு மாத கர்ப்பிணியான எனது மகளின் கரு கலைந்துவிட்டது என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

ஜகதீஷ் கவுடா பாஜகவைச் சேர்ந்தவர் என்று கூறப்பட்ட நிலையில், அவரை கட்சியிலிருந்து நீக்கிவிட்டதாகவும், தற்போது கட்சிக்காக வேலை செய்பவரோ அல்லது கட்சி உறுப்பினரோ அவர் அல்ல என்று பாஜக மாவட்ட பிரமுகர் வரசித்தி வேணுகோபால் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சிக்மங்களூரு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உமா பிரசாந்த் ஜகதீஷ் கவுடா மீது பட்டியலினத்தவருக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தெரிவித்தார். மேலும் தலைமறைவாகியுள்ள அவரை தேடிக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com