கர்நாடகா | வீட்டு வசதி திட்டத்தில் சிறுபான்மையினருக்கு 15% இட ஒதுக்கீடு! - அமைச்சரவை ஒப்புதல்
கர்நாடக வீட்டுவசதி மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஜமீர் அகமது கான் வெள்ளிக்கிழமை இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டார். சிறுபான்மையினருக்கு 15 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியான நிலையில், இதற்கு பாஜக கடும் தெரிவிப்பு வருகிறது.
கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் அண்மையில் பெங்களூருவில் உள்ள விதான சவுதாவில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் வீட்டு வசதித்துறை அமைச்சர் ஜமீர் அகமது கான் பேசுகையில், “கர்நாடக அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் அனைத்து விதமான வீட்டு வசதி திட்டங்களில் முஸ்லிம், கிறிஸ்தவர், பவுத்தர் உள்ளிட்ட அனைத்து மத சிறுபான்மையினருக்கும் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும், சிறுபான்மையினருக்கு போதுமான வீடுகள் கிடைப்பதில்லை. எனவே இட ஒதுக்கீட்டின் அளவை உயர்த்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. அதன்படி சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீட்டின் அளவை 10 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதற்கான சட்ட திருத்த மசோதாவும் தயாரிக்கப்பட்டுள்ளது.
வீடு திட்டங்களில் சிறுபான்மையினருக்கு 15% இடஒதுக்கீடு வழங்குவது என்ற முடிவு இப்போது எடுக்கப்படவில்லை. 2019 ஆம் ஆண்டு எச்.டி. குமாரசாமி முதலமைச்சராக இருந்தபோது அமைக்கப்பட்ட அமைச்சரவை குழு இதனை பரிந்துரைத்தது. மத்திய அரசு ஏற்கனவே வீட்டுவசதித் திட்டங்களின் கீழ் சிறுபான்மையினருக்கு 15% ஒதுக்கீட்டை வழங்குகிறது. மாநிலத்திலும் இதே நிலை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ” என்று தெரிவித்தார்.
ஆனால், இந்த அறிவிப்பை பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதிர்த்தனர். இதுகுறித்து ஒரு அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ள சித்தராமையா, “ பிரதமரின் சிறுபான்மையினர் நலனுக்கான 15 அம்சத் திட்டத்தை (2019) அடிப்படையாக கொண்டுதான் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள பாஜக மூத்ததலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடியூரப்பா, “ இந்த அரசு ( காங்கிரஸ்) தேவையில்லாத பிரச்னைகளை உருவாக்குகிறது. எல்லாவற்றிக்கும் ஒரு எல்லை உண்டு.. அனைத்து சமுதாயத்தினருக்கும் கிடைக்கும் வகையில் திட்டங்கள் அமைய வேண்டும். இது அவ்வாறாக இல்லை . அதனால்தான், அனைவரும் இதனை எதிர்க்கிறார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.