சந்திரபாபு நாயுடுவுக்கு 14 நாள் நீதிமன்ற காவல்! ஜாமீனில் எடுக்கும் முயற்சிகள் தீவிரம்

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க விஜயவாடா ஊழல் தடுப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆந்திராவில் கடந்த 2019-ல் அப்போதைய முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடு ஆட்சியில் திறன் மேம்பாட்டு திட்டத்தில் 3 ஆயிரத்து 300 கோடி அளவிலான ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால், இந்த திட்டம் தொடங்குவதற்கு முன்பு ஒப்பந்த புள்ளி கோரப்பட்டு தனியார் நிறுவனத்திற்கு 10 சதவீத நிதி ஒதுக்கீடு செய்ததாக புகார் இருந்தது. இது தொடர்பாக 370 கோடிக்கு மோசடி நடந்ததாகவும் அப்போது புகார் எழுந்தது.

சந்திரபாபு நாயுடு
சந்திரபாபு நாயுடுtwitter page

இந்நிலையில், இது குறித்து விசாரணை நடத்த தற்போதைய ஜெகன் மோகன் தலைமையிலான அரசு, காவல் துறைக்கு உத்தரவிட்டது. அந்த வகையில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையை நடைபெற்று வந்தது. பின்னர் வழக்கானது ஆந்திர சிஐடி காவல் துறைக்கு மாற்றப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது.

14 நாட்கள் நீதிமன்ற காவல்!

தொடர் விசாரணைக்கு பிறகு நேற்று நந்தியால் பகுதியில் இருந்த முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு சிஐடி காவல் துறையினர் கைது வாரண்ட்டை பிறப்பித்தனர். பின்னர் 12 பிரிவுகளில் கைது செய்து விஜயவாடாவில் உள்ள சிஐடி அலுவலகத்தில் விசாரணை நடத்தினர். இரவு முழுவதும் 10 மணி நேரமாக நடத்தப்பட்ட விசாரணைக்கு பின்பு ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

சந்திரபாபு நாயுடு வழக்கு
சந்திரபாபு நாயுடு வழக்கு

நீதிமன்ற விசாரணையின் முடிவில் சந்திரபாபுவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். தீர்ப்பைத் தொடர்ந்து ராஜமுந்திரியில் உள்ள சிறைக்கு சந்திரபாபு நாயுடு அழைத்து செல்லப்பட உள்ளார். இதனையடுத்து பிணை வழங்க சந்திரபாபு நாயுடு தரப்பில் முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com