‘ஒரு விஐபிக்கு 14 போலீசார்; 760 பொதுமக்களுக்கு ஒரு போலீஸ்’ - தெலங்கானாவின் நிலை?
760 மக்களுக்கு ஒரு போலீசார் என்ற வீதத்திலேயே தெலங்கானா பாதுகாப்பு இருப்பதாகவும், அதேவேளையில் ஒரு விஐபிக்கு சராசரியாக 14 போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர் என்றும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது
தெலங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்தில் இளம்பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து பெண் பாதுகாப்பில் பல முக்கிய நடவடிக்கைகளை தெலங்கானா அரசு எடுத்து வருகிறது. குறிப்பாக காவலர்கள் கிடுக்கிப்பிடியில் சிக்கியுள்ளனர்.
இளம்பெண் காணாமல் போனது குறித்து ஷம்ஷாபாத் காவல்நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய தாமதப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து சைபராபாத் காவல் ஆணையர் விசாரணை மேற்கொண்ட நிலையில் உதவி ஆய்வாளர் ரவிகுமார், தலைமைக் காவலர்கள் வேணு கோபால் மற்றும் சத்யநாராயண கவுடா ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
காவலர்கள் துரிதமாக செயல்படவில்லை என்றும் தெலங்கானாவில் காவலர்கள் மேம்போக்காக செயல்பட்டுவருவதாகவும் பொதுமக்கள் தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் தெலங்கானாவை பொறுத்தவரை அதிக அளவில் காவலர்கள் பற்றாக்குறை இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
காவலர்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, 760 மக்களுக்கு ஒரு போலீசார் என்ற வீதத்திலேயே தெலங்கானா பாதுகாப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. அதேவேளையில் ஒரு விஐபிக்கு சராசரியாக 14 காவலர்கள் பாதுகாப்பு பணியில் இருப்பதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. தெலங்கானாவில் எம்பிக்கள், எம் எல் ஏக்கள், அரசு உயர் அதிகாரிகள், மற்ற அரசியல் தலைவர்கள் என மொத்தம் 300 விஐபிக்கள் இருப்பதாகவும், அவர்களுக்கு பாதுகாப்புப் பணியில் 4000க்கும் அதிகமான போலீசார் இருப்பதாகவும் தகவல் வெளியிட்டுள்ளது. ஆனால் மக்கள் பாதுகாப்பில் போலீசாரின் எண்ணிக்கை மிகவும் கவலைக்குரிய விஷயமாகவே உள்ளது.
ஒரு லட்சம் மக்களுக்கு வெறும் 131 போலீசார் மட்டுமே பாதுகாப்பு என்ற வீதத்தில் உள்ளனர். ஒரு தனி போலீசார் 2.5 சதுர கிமீ பரப்பளவை கண்காணிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள, காவல்துறை தலைவர் மகேந்தர் ரெட்டி, ‘தெலங்கானா காவல்துறை நாட்டின் துடிப்பான காவல்துறையில் ஒன்று. அண்மையில் 18,000 புதிய போலீசார்களை பணியில் அமர்த்த அரசு அனுமதித்துள்ளது. அதற்கான பணிகள் தொடங்கிவிட்டன. தேவையான துணை ஆய்வாளர்களும் விரைவில் பணி அமர்த்தப்படவுள்ளனர்’ என தெரிவித்துள்ளார்.