சிபிஐ விசாரணை | இருமல் மருந்தால் 14 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம்... தமிழக அரசின் அறிவுறுத்தல் என்ன?
மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் இருமல் மருந்து குடித்து உடல் நலன் பாதிக்கப்பட்டு, குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், 14 குழந்தைகள் உயிரிழந்தனர். அதே நேரத்தில் ஐந்து குழந்தைகள் மகாராஷ்டிராவில் உள்ள நாக்பூரில் சிறப்பு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விவகாரத்தில் மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் அலட்சிய போக்கு தொடர்பாக பல்வேறு அதிர்ச்சியாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. என்ன நடந்தது விரிவாக பார்க்கலாம்.
மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் இருமல் மருந்து குடித்து, உடல் நலன் பாதிக்கப்பட்டு, குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், மத்தியப் பிரதேசம் சிந்த்வாரா மாவட்டத்தில் மட்டும் 14 குழந்தைகள் இறந்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக மருத்துவர் பிரவீன் சோனி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் பல குழந்தைகளுக்கு ’கோல்ட்ரிஃப் சிரப்’ இருமல் மருந்தை பரிந்துரைத்ததாகக் கூறப்படுகிறது. அவர்களில் பெரும்பாலோர் பராசியாவில் உள்ள அவரது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர் என்று தகவல்கள தெரிவிக்கின்றன.
மேலும் அம்மருந்தைத் தயாரித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மருந்து உற்பத்தியாளரான ஸ்ரேசன் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்தின் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இருமல் சிரப் கொடுக்கப்பட்ட பின்னர் ஐந்து வயதுக்குட்பட்ட பல குழந்தைகள் இறந்ததாகப் புகாரில் கூறப்பட்டுள்ளது. பின்னர் ஆய்வகச் சோதனைகளில் ஆன்டிஃபிரீஸ் மற்றும் பிரேக் திரவங்களில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு நச்சு இரசாயனமான டைஎதிலீன் கிளைகோல் (DEG) 48.6 சதவீதம் இருப்பது கண்டறியப்பட்டது.
இது சிறுநீரக செயலிழப்பு மற்றும் மரணத்தைக்கூட ஏற்படுத்தும் என்று அறியப்படும் ஒரு நச்சு இரசாயனமாகும். இதன்பேரிலேயே அந்த மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட குழந்தைகளின் சிறுநீரக திசு பகுப்பாய்வில், அவர்கள் உட்கொண்ட இருமல் சிரப்பில் டைஎதிலீன் கிளைகோல் என்ற நச்சுப் பொருள் கலந்திருப்பது கண்டறியப்பட்டதாக, சிந்த்வாரா மாவட்ட ஆட்சியர் ஷீலேந்திர சிங், பயாப்ஸி அறிக்கைகளை மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளார்.
மறுபுறம், சிந்த்வாரா மாவட்டத்தில் குழந்தைகளின் தொடர்ச்சியான உயிரிழப்பால், மத்தியப் பிரதேச அரசு கோல்ட்ரிஃப் இருமல் சிரப் விற்பனையை மாநிலம் முழுவதும் அதிகாரப்பூர்வமாக தடை செய்வதாக அறிவித்தது. அதேபோல், அக்டோபர் 1 முதல் தமிழக அரசும் இந்த கோல்ட்ரிஃப் இருமல் சிரப் மருந்தை தடை செய்துள்ளது.
இதனிடையே, இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன், கோல்ட்ரிப் இருமல் மருந்தை குழந்தைகளுக்கு அளிக்க வேண்டாம். தமிழ்நாட்டில் அந்த வகை இருமல் மருந்து விற்பனையாகி வருகிறதா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம். காலாவதியான மருந்தை உட்கொண்டதால் குழந்தைகள் உயிரிழந்திருக்கலாம் என்கிற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது”எனக் கூறினார்.
தொடர்ந்து, இன்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர், “இருமல் மருந்தினால் குழந்தைகள் இறந்த பிறகும்கூட மருந்தை நிறுத்தாமல் மீண்டும் பிரிஸ்க்கிரைப் செய்திருக்கிறார்கள்.. இது தவறு.. கண்டிப்பாக இது குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.. மக்களுக்கு மருந்து கடையில் வாங்கக்கூடிய மருந்தின் மீது ஒரு மரியாதை வர வேண்டும்.. நம்பிக்கை வர வேண்டும்.. இந்திய பார்மா கம்பெனியின் கமிஷனுக்கு தமிழகத்தில் இருந்து சமீபத்தில்தான் ஒருவர் பொறுப்பு ஏற்றுள்ளார்.. நிச்சயமாக இதையேல்லாம் அவர் பார்த்து நடவடிக்கை எடுப்பார் என்பது குறித்து நம்பிக்கை இருக்கிறது” என்று கூறினார்.
இந்நிலையில், நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.