லாரி மீது ஜீப் மோதிய விபத்தில் 12 பேர் உடல் நசுங்கி பலியாயினர்.
மத்திய பிரதேச மாநிலம் அலிராஜ்பூர் மாவட்டத்தில் உள்ளது சீஜாவாடா கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த 12 தொழிலாளர்கள் மற்றும் பக்கத்து வீட்டில் உள்ள சிலர் என மொத்தம் 25 பேர் குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகிலுள்ள தோல்கா என்ற ஊருக்கு சென்றனர். பின்னர் ஒரு ஜீப்பில் தங்கள் ஊருக்குத் திரும்பினர். இன்று அதிகாலை அகமதாபாத்- இந்தூர் தேசிய நெடுஞ்சாலையில் ஜீப் சென்றுகொண்டிருந்தது. குஜராத் மாநிலம் கத்லால் என்ற இடத்தின் அருகே வந்தபோது, முன்னே சென்று கொண்டிருந்த லாரி மீது ஜீப் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் ஜீப், லாரியின் பின் பகுதிக்குள் புகுந்தது. இதில் ஜீப்பில் இருந்த 8 பெண்கள் உட்பட 12 பேர் அந்த இடத்திலேயே பலியாயினர். இதையடுத்து தகவல் கிடைத்து வந்த போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.