’எனது மகள் பள்ளி செல்ல விரும்புகிறாள்; தடுப்பூசி போடுங்கள்’’ : கோர்ட்டை நாடிய தாய்மார்கள்

’எனது மகள் பள்ளி செல்ல விரும்புகிறாள்; தடுப்பூசி போடுங்கள்’’ : கோர்ட்டை நாடிய தாய்மார்கள்
’எனது மகள் பள்ளி செல்ல விரும்புகிறாள்; தடுப்பூசி போடுங்கள்’’ : கோர்ட்டை நாடிய தாய்மார்கள்

12 வயது நிரம்பிய குழந்தைகள் மீண்டும் பள்ளிக்கு செல்ல விரும்புகிறார்கள், எனவே குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தி வைரஸிடமிருந்து பாதுகாக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநலமனு தாக்கல் செய்யப்ப்பட்டிருக்கிறது.

அம்மா, நான் பள்ளிக்கு செல்ல விரும்புகிறேன். நான் எப்போது பள்ளிக்குச் செல்ல முடியும்? ” என்ற ஒரு 12 வயது சிறுமியின் கேள்வி தற்போது  டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசையும், டெல்லி அரசாங்கத்தையும் பதில் சொல்ல வைத்திருக்கிறது.  

12 வயது சிறுமியான தியா குப்தாவின் தாய் நியோமா வாசுதேவ் குப்தா மற்றும் 8 வயது குழந்தையின் தாயான ரோமா ரஹேஜா ஆகியோர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் கூட்டாக பொதுநலமனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில்  டெல்லியில் வசிக்கும் குழந்தைகளுக்கான தடுப்பூசி நெறிமுறையை அமல்படுத்தவும், டெல்லியில் உள்ள குழந்தைகளின் பெற்றோருக்கு தடுப்பூசி போடப்படுவதில் முன்னுரிமை அளிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது.

இந்த பொதுநல மனுவிற்கான யோசனை எவ்வாறு உருவானது என்று சொல்லும் நியோமா, “நாங்கள் சில மாதங்களுக்கு முன்பு மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தோம், அப்போது தியா பள்ளிக்குச் செல்ல விரும்புவதாகக் கூறினாள். நீங்கள் தடுப்பூசி போட்டவுடன் பள்ளிக்கு செல்லலாம் என்று நான் சொன்னேன். அதன்பின் விசாரித்தபோது, குழந்தைகளுக்கான தடுப்பூசி குறித்து தெளிவான திட்டம் எதுவும் இல்லை என்பதை உணர்ந்துதான் இந்த பொதுநல மனுவை தாக்கல் செய்ய முடிவு செய்தோம் என அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், அமெரிக்காவிலும் வேறு சில நாடுகளிலும் 12-17 வயதுடைய குழந்தைகள் தடுப்பூசி போட்டு மீண்டும் பள்ளிக்குச் செல்கின்றனர். இந்திய குழந்தைகளுக்கு ஏன் அதுபோல கல்வி கற்பிக்கக்கூடாது? ” என்று நியோமா கேள்வி எழுப்பியுள்ளார்.

வக்கீல்கள் பிஹு ஷர்மா மற்றும் அபிநவ் முகர்ஜி மூலம் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு, இந்தியாவில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதை உறுதி செய்வதன் மூலம், அவர்களின் அடிப்படை வாழ்க்கை உரிமையை பாதுகாக்க ஏன் முயற்சிக்கவில்லை என்று தியா யோசித்துக்கொண்டிருப்பதாக வலியுறுத்துகிறது. ஆகவே, நாட்டில் குழந்தைகள் தடுப்பூசி மூலம் கொடிய வைரஸிலிருந்து பாதுகாக்கப்படாவிட்டால், அது இந்த நாட்டின் எதிர்கால தலைமுறையை மிகவும் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலையை உருவாக்கும், குழந்தைகளை கடுமையான மன அழுத்தத்தில் சிக்கவைக்கும் என்றும் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த பொது நல மனு தொடர்பாகவும், குழந்தைகளுக்கான தடுப்பூசி குறித்த நிலைப்பாடு பற்றியும் மத்திய அரசும், டெல்லி அரசும் பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com