
இந்தியாவில் சமீப காலமாகவே பல மாநிலங்களில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது. சாலையில் செல்வோரை துரத்துவது, இரவு பணி முடிந்து செல்பவர்களை துரத்துவது, சிறுவர்களை கடிப்பது, பொதுமக்களை விரட்டி விரட்டி கடிப்பது போன்ற சம்பவங்கள் நடப்பது பல இடங்களில் வழக்கமாகிவிட்டது. இதில் பெரும்பாலும் சிறுவர், சிறுமிகளே அதிகம் பாதிக்கப்படும் அவல நிலை உள்ளது. மேலும் வாகனத்தை நாய்கள் துரத்திச் செல்வதால், எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி, வாகனங்களில் இருந்து விழுந்து அடிபடுகின்றனர். இப்படி நாய் தொல்லையால் பல தரப்பினரும் பயத்திலேயே சாலைகளில் பயணம் செய்கின்றனர். அந்த அளவுக்கு தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. இந்நிலையில்தான் தெருநாய்கள் கடித்ததில் 12 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.
உத்தரப் பிரதேசம் மாநிலம் பரேலி அருகே கானா கவுந்தியா கிராமத்தில் அயான் (12) என்ற சிறுவன் தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது திடீரென தெரு நாய்கள் சிறுவர்களைத் தாக்கத் தொடங்கியது. சிறுவர்கள் நாய்களுக்கு பயந்து சிதறி ஓடினர். சிறுவன் அயான் ஓடும்போது கீழே விழவே, தெருநாய்கள் அவன் மீது பாய்ந்திருக்கின்றன.
அப்போது அந்த வழியாக சென்றவர்கள், சிறுவனை நாய்களிடமிருந்து மீட்டனர். படுகாயம் அடைந்த சிறுவன் மருத்துவமனையில் உடனடியாக சேர்க்கப்பட்டான். இருப்பினும் சிறுவன் அயான் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். நாய்கள் தாக்கியதில் மேலும் ஒரு குழந்தை காயமடைந்திருக்கிறது.
பரேலியில் தெரு நாய்கள் சிறுவர்களைத் தாக்குவது இது முதல்முறை அல்ல. சில மாதங்களுக்கு முன்பு வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமி தெரு நாய்கள் தாக்கியதில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. நகரில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதாக மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சிக்கு பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் புலம்புகின்றனர்.