ஒரே ஒரு மாணவர் மட்டும் படிக்கும் பள்ளி.. 12 கி.மீ பயணித்து வகுப்பெடுக்கும் ஆசிரியர்!

ஒரே ஒரு மாணவர் மட்டும் படிக்கும் பள்ளி.. 12 கி.மீ பயணித்து வகுப்பெடுக்கும் ஆசிரியர்!
ஒரே ஒரு மாணவர் மட்டும் படிக்கும் பள்ளி.. 12 கி.மீ பயணித்து வகுப்பெடுக்கும் ஆசிரியர்!

மகாராஷ்டிராவில் ஒரேயொரு மாணவருக்காக 12 கிலோ மீட்டர் பயணம் செய்து ஆசிரியர் ஒருவர் பாடம் நடத்தி வருகிறார்.

மகாராஷ்டிர மாநிலம் வாஷிம் மாவட்டத்தில் அமைந்துள்ளது கணேஷ்பூர் கிராமம். இந்த கிராமத்தில் 150 பேர் வசித்து வருகின்றனர். இந்தக் கிராமத்தில் அரசு ஆரம்பப் பள்ளி ஒன்று உள்ளது. இந்தப் பள்ளியில் ஒரேயொரு மாணவர் மட்டும் படிப்பதுதான் வியப்புக்குரிய விஷயம். கார்த்திக் ஷெகோக்கர் என்ற மாணவர் அந்தப் பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

அவருக்கு பாடம் நடத்துவதற்காக கிஷோர் மங்கார் என்ற ஆசிரியர் தினமும் 12 கி.மீ. பயணம் செய்து பள்ளிக்கு வருகை தருகிறார். அவருக்கு அனைத்துப் பாடங்களையும் இந்த ஆசிரியர் ஒருவரே நடத்துகிறார். அந்த மாணவருக்கு, ஆசிரியர் கிஷோர் இரண்டு ஆண்டுகளாகப் பாடம் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து ஆசிரியர் கிஷோர், “2 ஆண்டுகளாக இந்தப் பள்ளியில் ஒரே ஒரு மாணவர் மட்டுமே படித்து வருகிறார். பள்ளியில் நான் மட்டுமே ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். காலையில் வகுப்பு தொடங்குவதற்கு முன்பு இருவரும் தேசிய கீதம் பாடுவோம். அதன்பின்னர் வகுப்பு தொடங்கும். இந்த மாணவருக்கு அனைத்து பாடங்களையும் நானே கற்றுத் தருகிறேன். ஒரே ஒரு மாணவர் மட்டுமே பள்ளிக்கு வந்தபோதும், மாணவரின் கல்விக்கு தடை விதிக்காமல், பள்ளி நிர்வாகம் தொடர்ந்து நடைபெறுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

கல்விதான் ஒரு மனிதனின் வாழ்க்கையை பெரிய அளவில் முன்னேற்றும் என நாட்டின் தலைவர்கள் பலரும் உரக்கச் சொல்லி இருக்கிறார்கள். ஆனால், ஒரு கிராமத்தில் ஒரே ஒரு மாணவர் மட்டும் படிப்பது இன்றளவும் இந்தியாவில் உள்ள சில கிராமங்களில் நிலையை நமக்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறது. மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து சேர்க்கை அதிகரிக்க ஆவண செய்ய வேண்டும் என்பதே அனைவரது விருப்பம். பள்ளி அனைத்து வசதிகள் இருந்தாலும் போதிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தவில்லை என்றால் அது பலனற்று போய்விடும். அதனால், மக்கள் மத்தியில் கல்வியின் அவசியத்தை எடுத்துச் செல்ல வேண்டும். அதற்கு பல்வேறு வகைகளில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும். 

- ஜெ.பிரகாஷ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com