வேளாண் சட்டம்: விவசாயிகள் பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி

வேளாண் சட்டம்: விவசாயிகள் பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி
வேளாண் சட்டம்: விவசாயிகள் பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி

விவசாயிகள் மத்திய அரசு இடையேயான 11-ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்தது.

விவசாய போராட்டத்தில் ஒவ்வொரு பேச்சுவார்த்தையின்போதும் அரசு தரப்பு, விவசாயிகளிடம் பல்வேறு விதமான கோரிக்கைகளை முன்வைத்து வருகிறது. முதலாவதாக குறைந்தபட்ச ஆதார விலைக்கு சம்மதம் அளிப்பதாகவும், அதற்கான உத்தரவாதத்தை எழுத்துப்பூர்வமாக கொடுக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும் விவசாயிகளின் பயிர்க்கழிவு அபராதத் தொகை ஏற்கெனவே ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுதவிர மின்சார திருத்த சட்டம் உடனடியாக கொண்டுவரப்பட மாட்டாது எனவும் உறுதியளித்தனர்.

மத்திய அரசின் பரிந்துரையை விவசாயிகள் ஏற்கமறுத்த நிலையில், தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. ஏற்கெனவே டெல்லி விவசாயிகளுடன், மத்திய அரசு 10 முறை நடத்திய பேச்சுவார்த்தைகளில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை. ஒன்றரை ஆண்டுகளுக்கு வேளாண் சட்டங்களை நிறுத்தி வைப்பதாக 10ஆம் கட்ட பேச்சுவார்த்தையின்போது மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதை விவசாய சங்கங்கள் நிராகரித்தன. எனினும், இவ்விவகாரம் தொடர்பாக இரு தரப்பு பிரதிநிதிகள் அடங்கிய குழுவை அமைக்க அரசு முன்வந்ததாகவும், இது குறித்து பரிசீலித்து தெரிவிப்பதாகவும் விவசாய பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற 11-ஆம் கட்ட பேச்சுவார்தையிலும் உடன்பாடு எதுவும் எட்டப்படாமல் தோல்வியிலேயே முடிந்துள்ளது. நரேந்திர சிங் தோமர் விவசாயிகளிடம், ’’உங்கள் கோரிக்கைகளை மத்திய அரசிடம் முன்வைக்காமல், முந்தைய நாளே ஊடகங்களிடம் கூறிவிட்டீர்கள். நாங்கள் தொடர்ச்சியாக இறங்கி, உங்களுடைய கோரிக்கைகளுக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு அளித்துவருகிறோம். ஆனால் நீங்கள் எதற்கும் சம்மதம் தெரிவிக்க மாட்டோம் என்கிறீர்கள்’’ என்று கவலையுடன் தெரிவித்திருக்கிறார்.

அதற்கு விவசாய சங்க பிரதிநிதிகள், ‘’எங்களுடைய ஒரே கோரிக்கை என்பது 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவது என்பதுதான். அதை ஏன் நீங்கள் ஏற்கமாட்டோம் என்கிறீர்கள். உச்சநீதிமன்றமே இடைக்கால நிவாரணம் வழங்கியுள்ளபோதும், நீங்கள் கால அவகாசத்தை நீட்டிப்போம் என்பது எங்களுக்கு தேவையில்லை. 3 சட்டங்களையும் முழுமையாக திரும்ப பெறுவோம் என்று கூறினால் மட்டுமே இந்த பேச்சுவார்த்தைக்கு சுமூகமான முடிவு கிடைக்கும். போராட்டம் முடிவுக்கு வரும்’’ என்று கூறியிருக்கின்றனர்.

இதனால் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைக்கான தேதிகூட இன்று அறிவிக்கப்படவில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com