கடந்த 10 ஆண்டுகளில் 1,160 யானைகள் உயிரிழப்பு - அதிர்ச்சியளிக்கும் ரிப்போர்ட்
இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு காரணங்களால் 1,160 யானைகள் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தை சேர்ந்த பாண்டியராஜா, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இது குறித்து கேள்விகளை எழுப்பியிருந்தார். அதற்கு யானைகள் திட்ட வல்லுநரும், பொது தகவல் அலுவலருமான முத்தமிழ்ச் செல்வன் பதிலளித்துள்ளார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் பலவிதமான காரணங்களால் பத்து ஆண்டுகளில் 1,160 யானைகள் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.
2020 டிசம்பர் இறுதி வரை 741 யானைகள் ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளன. இதில் அதிகபட்சமாக அசாமில் 62 யானைகள் உயிரிழந்துள்ளன. தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் ரயிலில் அடிபட்டு 4 யானைகள் உயிரிழந்துள்ளன. மின்சாரம் தாக்கி 741 யானைகள் இறந்துள்ளன. இதில் அதிகபட்சமாக ஒரிசாவில் 133 யானைகள் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்துள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் 93 யானைகள் இறந்துள்ளன. வேட்டையாளர்களால் 160 யானைகள் கொல்லப்பட்ட அதிர்ச்சித் தகவலும் தெரியவந்துள்ளது.
இதில் அதிகபட்சமாக ஒரிசாவில் 49 யானைகள் வேட்டையாடப்பட்டுள்ளன. தமிழத்தில் 10 யானைகள் வேட்டையாடப்பட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் அசாமில் 32 யானைகள் விஷம் வைத்து கொல்லப்பட்டுள்ளன. கடந்த 2017-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, 29 ஆயிரத்து 964 யானைகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கர்நாடக மாநிலத்தில் 6 ஆயிரத்து 49 யானைகளும், அசாமில் 5 ஆயிரத்து 719 யானைகளும் உள்ளன. தமிழகத்தில் 2 ஆயிரத்து 761 யானைகளும் இருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது. இந்தியாவில் யானைகளை பாதுகாப்பதற்காக டந்த 10 ஆண்டுகளில் 212.5 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.