சீருடை அணியாததால் ஆண் கழிவறையில் நிற்க வைக்கப்பட்ட 11 வயது சிறுமி
ஐதராபாத் நகரில் பள்ளி சீருடை அணியாததால் 11 வயதுச் சிறுமி ஆண்கள் கழிவறையில் நிற்க வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கும் அந்தச் சிறுமி கடந்த சனிக்கிழமை சீருடை அணியாமல் பள்ளி சென்றார். இதனை கண்ட பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியர், சிறுமியைத் தரதரவென இழுத்து வந்து ஆண்கள் கழிவறையில் நிற்கவைத்தார்.
பின்னர், தனக்கு இழைக்கப்பட்ட அவமானம் குறித்து சிறுமி வீட்டிற்கு வந்ததும் தனது தந்தையிடம் புகார் தெரிவித்தார்.
சிறுமியின் தந்தை இந்தச் சம்பவம் தொடர்பாக ஆந்திர பிரதேசக் குழந்தைகள் உரிமை அமைப்பிடம் முறையிட்டார்.
இதனையடுத்து, சம்பந்தப்பட்ட ஆசிரியர் மற்றும் பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதேபோல், காவல் நிலையத்திலும் புகார் கொடுத்தனர்.
இதனையடுத்து இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த தெலுங்கானா அரசு உத்தரவிட்டுள்ளது.