சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொலை: நீதி கிடைக்க ஒன்றிணைந்த கிராம மக்கள்
அசாம் மாநிலத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து எரித்தவர்களை, கிராம மக்களே காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
அசாம் மாநிலம் நாகோன் மாவட்டத்தில் கடந்த மார்ச் 23ஆம் தேதி 11வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து தீவைத்து எரிக்கப்பட்டாள். சிறுமியின் பெற்றோர்கள் வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது வீட்டிற்குள் நுழைந்த மூவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து எரித்தனர். அக்கம்பக்கத்தினர் சிறுமியை தீயில் இருந்து மீட்டனர். இதனையடுத்து பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 90 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் உயிரிழந்தார். இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
அதில் அதே கிராமத்தை சேர்ந்த ஷாகிர் மற்றும் இரு சிறார்கள் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து தீவைத்தது தெரியவந்தது.இந்த விவகாரத்தில் கிராம மக்களே ஒன்று சேர்ந்து குற்றவாளிகளை காவல்துறையிடம் ஒப்படைந்தனர். சிறார்கள் இருவர் சிக்கிய நிலையில் முக்கிய குற்றவாளியான ஷாகிர் பக்கத்து மாவட்டத்திற்கு தப்பிச்சென்று விட்டான்.இதுகுறித்த தகவலையும் கிராம மக்களே காவல்துறைக்கு தெரிவித்தனர்.இதனையடுத்து ஷாகிரும் கைது செய்யப்பட்டார்.
காஷ்மீர் மாநிலம் கத்துவாவில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் பல்வேறு தரப்பினர் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டனர். காவல்துறை அதிகாரிகள் சாட்சியங்களை அழிக்க முற்பட்டனர்.அதேபோல் வழக்கறிஞர்கள் குற்றவாளிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவிடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதுதொடர்பாக காஷ்மீர் பார் கவுன்சிலுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. குற்றவாளியை விடுவிக்க கோரி நடைப்பெற்ற பேரணியில் பாஜக எம்எல்ஏக்களும் பங்கேற்றிருந்தனர்.தற்போது அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அசாமில் ஒரு கிராமமே குற்றவாளிகளுக்கு எதிராக ஒன்றிணைந்து சிறுமியின் குடும்பத்தினருக்கு நியாயம் கிடைக்க உதவி புரிந்துள்ளனர்.