என்னதான் ஆச்சு விடுதியில் இருந்த பெண்களுக்கு ? தொடரும் மர்மம் !
சர்ச்சைக்குள்ளான பீகார் பெண்கள் சிறுமிகள் விடுதியில் 11 பேருக்கும் மேற்பட்ட பெண்கள் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. பீகார் மாநிலம் முஸாப்பூர் நகர் விடுதியில் சிறுமிகள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்த நாளில் இருந்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தாண்டு மார்ச் 20 ஆம் தேதி முதல் பீகார் மாநிலக் காவல் துறை விசாரணை மேற்கொள்ள தொடங்கியது.
இந்த விவகாரம் தொடங்கிய நாளில் 27 பெண்கள் விடுதியில் தங்கி இருப்பதாக ஆவணங்கள் தெரிவித்தன. ஆனால், அதில் இப்போது 11 பெண்கள் காணாமல் போயிருப்பது தெரிய வந்துள்ளது. இப்போது, இந்த வழக்கு சிபிஐ விசாரணை குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதால் பீகார் விடுதி விவகாரம் வேகம் எடுக்க தொடங்கியுள்ளது. மும்பையை சேர்ந்த டாட்டா சமூக அறிவியல் நிறுவனம் பீகாரில் உள்ள சிறுமிகள் காப்பகத்தில் தணிக்கை மேற்கொண்டது.
அப்போது முசாபர்பூரில் இயக்கும் அரசு உதவி பெறும் காப்பகத்தில் பல சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு ள்ளதாக அறிக்கை சமர் பித்தது. இது அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்தக் காப்பகத்தில் இருந்த 42 சிறுமிகளும் வேறு காப்பகத்துக்கு மாற்றப்பட்டனர். முதலில் 29 சிறுமிகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், அவர்கள் அனைவரும் மாத கணக்காகப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக அறிக்கை கூறியது.
இந்நிலையில் மேலும் 5 சிறுமிகளின் மருத்துவ அறிக்கை இன்று வெளியானது. அதில் அவர்களும் மாதக்கணக்கில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதியாகியுள்ளது. இதையடுத்து 39 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ளனர். அனைத்து மாணவிகளுமே பாலியல் வன்கொடுக்கு ஆளாகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. பீகார் விடுதியில் இருப்பவர்களாலும் அங்கு வருகை தந்தவர்களாலும் வன் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சிறுமிகளில் சிலருக்கு கரு உருவாகியுள்ளது.
இதையறிந்த நிர்வாகம் பல சிறுமிகளுக்கு கருக்கலைப்பும் செய்துள்ளது. இந்தச் சம்பவத்தில் திடுக்கிடும் திருப்பமாக, ஒரு சிறுமி கொலை செய்யப்பட்டு வளாகத்தில் புதைக்கப்பட்டுள்ளதாக, சிறுமிகள் போலீசாரிடம் புகார் தெரிவித்திருந்தனர். இதைத் தொடர்ந்து போலீசார் அரசு விடுதியின் வளாகத்தில் தோண்டினர். எலும்புக் கூடுகள் ஏதும் சிக்கவில்லை. இந்த விவகாரத்தில் அந்த விடுதியை சேர்ந்த 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இன்னும் ஒருவரை தேடி வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றி அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.