சபரிமலைக்கு செல்ல முயன்ற பெண்கள் மீண்டும் மதுரைக்கு திரும்ப முடிவு

சபரிமலைக்கு செல்ல முயன்ற பெண்கள் மீண்டும் மதுரைக்கு திரும்ப முடிவு
சபரிமலைக்கு செல்ல முயன்ற பெண்கள் மீண்டும் மதுரைக்கு திரும்ப முடிவு

சபரிமலைக்கு செல்ல முயன்ற தமிழக பெண்கள் 11 பேர், போராட்டக்காரர்களின் எதிர்ப்பு காரணமாக மீண்டும் மதுரைக்கே திரும்ப 
முடிவு செய்துள்ளனர்.

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்பை அடுத்து சில பெண்கள் சபரிமலைக்கு செல்ல ஏற்கெனவே முயன்றனர். ஆனால் பக்தர்களின் எதிர்ப்பு காரணமாக அவர்கள் உள்ளே நுழைய முடியாமல் திரும்பிவிட்டனர். சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் நுழைவதற்கு கேரள பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியதோடு, கேரள சட்டசபையையும் முடக்கி வருகின்றனர். இதனிடையே சபரிமலை கோயில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். இதனால் சிரமங்களை அனுபவிக்க நேர்வதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் சபரிமலைக்கு செல்வதற்காக திட்டமிட்டு தமிழக பெண்கள் 11 பேர் கேரளா சென்றனர். மனிதி அமைப்பை சேர்ந்த அவர்கள் முதலில் பம்பையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். அப்போது காவல்துறையினர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவர்கள் சபரிமலை நோக்கி பயணம் மேற்கொண்டனர். இதனிடையே மலை ஏறிக்கொண்டிருந்த 11 பெண்கள் மீது குறிப்பிட்ட சிலர் தாக்குதல் நடத்த முயன்றனர். இதனால் பதட்டமான சூழல் ஏற்பட்டது. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர 11 பெண்களின் மலையேற்றத்தை நிறுத்திய காவலர்கள் அவர்களை மீண்டும் பம்பா காவல்நிலையத்திற்கு அழைத்து வந்தனர். தொடர்ச்சியாக அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதனிடையே போராட்டக்காரர்கள் எதிர்ப்பு காரணமாக 11 பெண்களும் மீண்டும் மதுரை செல்ல முடிவு செய்துள்ளனர். இத்தகவலை சபரிமலை பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட சிறப்பு போலீஸ் அதிகாரியான கார்த்திகேயன் தெரிவித்தார். அத்துடன் காலையில் நடைபெற்ற பதட்டமாக சூழல் தொடர்பாக 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். ஆனால் போலீசார் தங்களை வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்புவதாக மனிதி அமைப்பை சேர்ந்த செல்வி கூறியுள்ளார். மீண்டும் சபரிமலைக்கு செல்வோம் என்றும் அவர் உறுதிபட கூறியுள்ளார். மலையில் கிட்டத்தட்ட 100மீ தூரம் வரை அவர்கள் ஏறிய நிலையில் போராட்டக்காரர்களின் எதிர்ப்பு காரணமாக அவர்கள் மீண்டும் கீழே இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com