ஒரே வீட்டில் 11 பேர் மர்ம மரணம்: வீட்டில் இருந்த விநோத தடயம்..!
டெல்லியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அவர்களின் வீட்டில் கிடந்த விநோத குழாய்கள் போலீசாருக்கு மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் நேற்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 11பேர் அவர்களது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டனர். 10 பேர் தூக்கில் தொங்கிய நிலையிலும் வயதான பெண்மணி தரையில் சடலமாகவும் கிடந்தார். அனைவரும் கண்கள் மற்றும் கைகள் கட்டப்பட்ட நிலையில் இருந்துள்ளனர். இதனால் இது கொலையா? தற்கொலையா? என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இதனிடையே சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து கிடைத்த சில தகவல்கள் போலீசாருக்குமே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
போலீசார் வீட்டில் நடத்திய சோதனையில் ஒரு டைரி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. அதில் “மனித உடலானது தற்காலிகமானது, கண்களையும் வாயையும் மறைப்பதன் மூலம் பயத்தை வெல்ல முடியும்” என எழுதப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர். எனவே ஆன்மிக விவகாரத்தில் திட்டமிட்டே அவர்கள் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இருப்பினும் சில விசித்திரமான தடயங்களும் கிடைத்துள்ளன. வீட்டின் சுவரில் இருந்து 11 குழாய்கள் நீட்டிக் கொண்டிருந்தது போலீசாருக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்தக் குழாய்கள் தண்ணீர் வருவதற்கான குழாய்கள் இல்லை என்பதையும் போலீசார் உறுதி செய்துள்ளனர். இந்த 11 குழாய்களும் ஒன்றுடன் ஒன்று பக்கத்தில் இருந்துள்ளது. 4 குழாய்கள் நேராகவும், 4 குழாய்கள் வளைந்தபடியும் காணப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு தடயத்தையும் வைத்து விசாரித்து வரும் போலீசார் இந்தக் குழாயின் முக்கியத்துவத்தை உணர்ந்து அது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.