பா.ஜ.க-வின் 'மிஷன் பெங்கால்'... களமிறங்கியது 11 பேர் டீம்!

பா.ஜ.க-வின் 'மிஷன் பெங்கால்'... களமிறங்கியது 11 பேர் டீம்!
பா.ஜ.க-வின் 'மிஷன் பெங்கால்'... களமிறங்கியது 11 பேர் டீம்!

அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் மேற்கு வங்க தேர்தலுக்காக பாஜக 11 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. இந்தக் குழுவில் மத்திய தலைவர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. 

பீகார் வெற்றிக்குப் பிறகு பா.ஜ.க டார்கெட் செய்திருப்பது மேற்கு வங்கம். அடுத்த ஆண்டு மேற்கு வங்கத்தில் தேர்தல் நடைபெற இருக்கிறது. அங்கு, ஏற்கெனவே மம்தா பானர்ஜி வலுவான நிலையில் இருக்கிறார். இதனால், அவரை எதிர்க்க பா.ஜ.க மத்திய தலைமை `மிஷன் பெங்கால்' திட்டத்தை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதற்காக, 11 கொண்ட ஒரு முக்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் பெரும்பாலான மத்திய தலைவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசுக்கு இந்தத் திட்டத்தின் மூலம் ஒரு அட்டாக் கொடுக்க வேண்டும் என்பதே இந்த 11 பேருக்கும் பா.ஜ.க தலைமை கொடுத்திருக்கும் அசைன்மென்ட். 

இந்தக் குழுவைச் சேர்ந்த சிலர் திங்கள்கிழமையே கொல்கத்தா சென்றுவிட்டனர். இவர்கள் தங்களின் முதல்கட்ட பணிகளைத் தொடங்க இருக்கின்றனர். 

11 பேர் கொண்ட இந்தக் குழுவே, மாநிலக் கட்சி பிரிவின் உள்ளீட்டின் அடிப்படையில், வேட்பாளர்களின் அடிப்படை பட்டியலைத் தயாரிக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு வங்கத்துக்கு என தனியாக பிரச்சார உத்தியையும் இந்தக் குழு தயாரிக்கலாம் என மேற்கு வங்க ஊடகங்கள், சில தலைவர்களின் வருகைக்கு பிறகு செய்திகள் வெளியிட்டுள்ளன.

11 பேர் குழுவில் யார் யார்?!

கட்சி பொதுச் செயலாளர்கள் கைலாஷ் விஜயவர்ஜியா மற்றும் துஷ்யந்த் கவுதம், சுனில் தியோதர், வினோத் தவ்தே, வினோத் சோன்கர், ஹரிஷ் திவேதி மற்றும் அரவிந்த் மேனன் ஆகியோர் உள்ளனர். இது தவிர, பா.ஜ.க ஐடி விங் தலைவர் அமித் மால்வியா, மாநிலத் தலைவர் அமித் சக்ரவர்த்தி மற்றும் கிஷோர் பர்மன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். 

இந்தக் குழுவுக்கு கைலாஷ் விஜயவர்ஜியாவை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். செவ்வாயன்று, சுனில் தியோதர், அமித் மால்வியா மற்றும் பி.எல்.சந்தோஷ் உள்ளிட்ட ஆறு மத்திய தலைவர்கள் கொல்கத்தாவில் மாநிலத் தலைவர்களுடன் ஒரு கூட்டத்தை நடத்தினர்.

இதுதொடர்பாக மேற்குவங்க ஊடகங்களிடம் பேசியுள்ள சில பா.ஜ.க தலைவர்கள், "மேற்கு வங்க மாநிலத்தில் 294 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. அவை ஐந்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு தேர்தல் வேலைகள் பார்க்க இருக்கிறோம். ஒவ்வொரு மண்டலத்துக்கும் இந்த 11 பேர் கொண்ட மத்திய தலைவர்களின் பொறுப்பில் வைக்கப்படும். அவர்கள் மேற்பார்வையிலேயே தேர்தல் பணிகள் செய்யப்பட இருக்கிறது. 

இந்தக் குழுவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜெபி நட்டா இருவரும் தங்கள் கண்பார்வையில் வழிநடத்த இருக்கின்றதாக கூறப்படுகிறது.

மேற்கு வங்கத்தில் வெற்றி பெறுவது அவ்வளவு எளிதல்ல என்பது பா.ஜ.கவின் மத்திய தலைமைக்கு நன்றாகவே தெரியும். அங்கு, மம்தாவின் செயல்பாடுகள், அவரின் கட்சியின் நிலைமை எல்லாம் தெரிந்துதான் வெற்றியை அவ்வளவு எளிதில் பெற்றுவிட முடியாது எனக் கருதுகிறார்கள் மத்திய தலைவர்கள். 

இந்தக் காரணத்தினாலேயே பாஜக தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் சட்டமன்றத் தேர்தலை மாநிலத் தலைவர்களின் கண்காணிப்பில் இல்லாமல், தங்களின் நேரடி கண்காணிப்பில் வைத்துள்ளனர்" என்று கூறியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com