நவம்பர் மாத ஜிஎஸ்டி வரி வசூல் 11% அதிகரிப்பு - தமிழகத்தில் எவ்வளவு கோடிகள் தெரியுமா?

நவம்பர் மாத ஜிஎஸ்டி வரி வசூல் 11% அதிகரிப்பு - தமிழகத்தில் எவ்வளவு கோடிகள் தெரியுமா?
நவம்பர் மாத ஜிஎஸ்டி வரி வசூல் 11% அதிகரிப்பு - தமிழகத்தில் எவ்வளவு கோடிகள் தெரியுமா?

நடப்பாண்டின் நவம்பர் மாதத்தில் 1,45,867 கோடி ஜிஎஸ்டி வரி வசூல் செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் இன்று அறிவித்தது. சென்ற வருட நவம்பர் மாதத்தை விட 11% கூடுதல் வரி வசூலிக்கப்பட்டுள்ளது என அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் மாத வசூலில் மத்திய அரசின் ஜிஎஸ்டி வருவாய் ரூ.25,681 கோடியாகவும், மாநில அரசுகளின் ஜிஎஸ்டி வருவாய் ரூ.32,651 கோடியாகவும், மத்திய- மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.77,103 கோடியாகவும், செஸ் வரிவருவாய் ரூ.10,433 கோடியாகவும் உள்ளது. மற்றும் தமிழகத்தில் மட்டும் நவம்பர் மாதத்தில் 8,551 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. சென்ற வருட நவம்பர் மாதத்தை விட தமிழகத்தில் ஜிஎஸ்டி வசூல் 10% அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியை பொறுத்த வரையில் நவம்பர் மாதத்தில் 209 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூல் நடைபெற்றுள்ளது. சென்ற வருட நவம்பர் மாதத்தை விட புதுச்சேரி மாநிலத்தில் 22 சதவீதம் ஜிஎஸ்டி வசூல் அதிகரிப்பு என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மாநிலங்களைப் பொருத்தவரை, ரூ.21,611 கோடி ஜிஎஸ்டி வருவாயை ஈட்டி, நவம்பர் மாதம் அதிக வருவாய் ஈட்டிய மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.

மாதாந்திர ஜிஎஸ்டி வருவாய் தொடர்ந்து 9-ஆவது மாதமாக ரூ.1.4 லட்சம் கோடியைத் தாண்டி வசூலாகியுள்ளது. வழக்கமான பகிர்ந்தளிப்புக்கு பின்னர் நவம்பர் மாதத்தில் மத்திய ஜிஎஸ்டிக்கு ரூ.59,678 கோடியும், மாநில ஜிஎஸ்டிக்கு ரூ.61,189 கோடியும் கிடைத்துள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர நவம்பர் மாதத்தில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடாக ரூ.17 ஆயிரம் கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com