10 முறை எம்எல்ஏ: ’ஒடிசாவின் மகாராணி’ ஆன சென்னைப் பெண்.. 87 வயதில் மறைவு.. யார் இந்த சுக்னனா குமாரி?

ஒடிசா மாநிலத்தின் மூத்த பிஜு ஜனதா தளம் (பிஜேடி) தலைவரும், அம்மாநிலத்தின் நீண்டகால சட்டமன்ற உறுப்பினருமான வி.சுக்னனா குமாரி தியோ (87) சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.
சுக்னனா குமாரி தியோ
சுக்னனா குமாரி தியோட்விட்டர்

ஒடிசாவில் 10 முறை எம்எல்ஏவாக பதவி வகித்த அவர், வயது முதிர்வால் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். எனினும், அவர் சிகிச்சை பலனின்றி நேற்று (பிப்.9) நள்ளிரவு 1 மணியளவில் காலமானதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. முன்னதாக, அவரது உடல்நிலை குறித்து கேட்டறிவதற்காக முதல்வர் நவீன் பட்நாயக், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வந்து நலம் விசாரித்துவிட்டுச் சென்றார்.

அவருடைய மறைவுக்கு ஒடிசா ஆளுநர் ரகுபர் தாஸ், முதல்வர் நவீன் பட்நாயக், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவருடைய இரங்கல் குறித்து முதல்வர் நவீன் பட்நாயக், ”பொதுச் சேவையில் முத்திரை பதித்தவர். 10 முறை சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த அவரது இறப்பு ஈடு செய்ய முடியாத இழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: அமெரிக்காவில் மேலும் 1 இந்தியர் கொலை.. 40 நாட்களில் 4 மரணங்கள்.. தொடரும் சோகம்!

யார் இந்த சுக்னனா குமாரி தியோ?

சென்னையில் கடந்த 1937-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி மன்னர் ஆர்.வி.எம்.நீலாடி தியோவுக்கு மகளாகப் பிறந்த சுக்னனா, சென்னைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. பட்டப்படிப்பை முடித்தவர். ஒடிசா கஞ்சம் மாவட்டத்தில் உள்ள கல்லிகோட்டின் சமஸ்தானத்தின் அரசர் ராமசந்திர மர்தராஜ தியோவின் மருமகளான இவர், ஒடிசாவில் உள்ள மக்களால் ’மகாராணி’ என அழைக்கப்பட்டார். 1960ஆம் ஆண்டு தொடங்கிய அவருடைய அரசியல் வாழ்க்கைப் பயணத்தில், முதன்முதலில் 1963ஆம் ஆண்டில் கல்லிகோட் தொகுதியில் இருந்து காங்கிரஸ் வேட்பாளராக மாநில சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அடுத்து, 1974-இல் இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் கல்லிகோட்டில் இருந்து 8 முறையும், கபிசூர்யாநகரில் இருந்து 2 முறையும் எம்.எல்.ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1985-இல் கல்லிகோட்டிலிருந்து பிஜு ஜனதா கட்சி சார்பாக மீண்டும் வெற்றிபெற்ற பிறகு 2014ஆம் ஆண்டுவரை நடைபெற்ற எந்தத் தேர்தலிலும் அவர் தோல்வியடையவில்லை. 2019 சட்டமன்றத் தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. மொத்தத்தில் காங்கிரஸ் மற்றும் ஜனதா கட்சி சார்பில் 1963, 1974, 1977, 1985, 1990, 1995, 2000, 2004, 2009 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், ஒடிசா அரசியலில் நீண்டகால எம்.எல்.ஏவாக இருந்தவர் என்ற பெயரைப் பெற்றவர் ஆவார்.

இதையும் படிக்க: பாகிஸ்தான்: இம்ரான்கான் கட்சி முன்னிலை.. ஆனால் கூட்டணி ஆட்சி அமைக்கும் நவாஸ் ஷெரீப்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com