இந்தியா
கர்நாடகாவில் கொரோனாவில் இருந்து மீண்ட 10 மாத குழந்தை
கர்நாடகாவில் கொரோனாவில் இருந்து மீண்ட 10 மாத குழந்தை
கர்நாடகாவில் 10 மாத குழந்தை ஒன்று கொரோனா நோயிலிருந்து பரிபூரணமாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளது.
கொரோனா நோய் உலகையே அச்சமடையச் செய்து வருகிறது. இந்த நோய்த் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்து சென்று கொண்டுள்ளது. உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,780,649 ஆக உள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை இதனால் 8356 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய் வயது வித்தியாசமின்றி பலரையும் பாதித்து வருகின்றது.
இதனிடையே கர்நாடகாவைச் சேர்ந்த 10 மாத குழந்தை முழுமையாகக் குணமடைந்துள்ளது. ஆகவே அந்தக் குழந்தையை மருத்துவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். தக்ஷிண கன்னடா பகுதியைச் சேர்ந்த இந்தக் குழந்தை குணமடைந்த செய்தி இந்தக் கடுமையான நெருக்கடிக்கு இடையில் பலரையும் ஆறுதலடையச் செய்துள்ளது.
தக்ஷிண கன்னடா பகுதியிலுள்ள பன்ட்வால் தாலுகாவைச் சேர்ந்த இந்தக் குழந்தை மார்ச் 26 அன்று கொரோனா நோய்த் தொற்று சோதனை செய்யப்பட்டது. அப்போது குழந்தைக்கு பாசிடிவ் என மருத்துவ அறிக்கையின் மூலம் தெரியவந்தது. சுகாதாரத் துறையின் கூற்றுப்படி, குழந்தைக்கு எந்த ஒரு வெளிநாட்டுப் பயணத்தையும் மேற்கொள்ளவில்லை என்பது தெரியவந்தது.
மேலும் மார்ச் 27 அன்று வெளியிடப்பட்ட சுகாதார குறிப்பின்படி, குழந்தை தனது குடும்பத்தினருடன் கேரளாவுக்குப் பயணம் செய்ததாகக் குறிப்பிட்டுள்ளது. மார்ச் 23 அன்று காய்ச்சல் மற்றும் கடுமையான கடுமையான சுவாச பிரச்னையால் மங்களூரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குழந்தை பரிசோதிக்கப்பட்டது. இந்த விசயத்தில், தொற்றுநோய்க்கான சரியான ஆதாரத்தைச் சுட்டிக்காட்ட மாவட்ட அதிகாரிகள் மற்றும் சுகாதார அதிகாரிகள் தவறிவிட்டனர் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் தக்ஷிண கன்னட மாவட்ட சுகாதார அதிகாரி ராமச்சந்திரா இரண்டு முறை எடுக்கப்பட்ட சோதனையில் குழந்தைக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரிந்தது. இரண்டு முறையும் நெகடிவ் என வந்துள்ளது. குழந்தை பரிபூரணமாகக் குணமடைந்துவிட்டது. ஆகவே வீட்டுக்குப் போக அனுமதித்துள்ளோம் என்று கூறியுள்ளார்.
இதற்கிடையில், குழந்தையின் தாய் மற்றும் பாட்டிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதற்காக அறிக்கை இன்னும் வரவில்லை. அவர்களுக்கும் நெகடிவ் என்பது உறுதியாகுமா என்பது முடிவுகள் வந்த பிறகே தெரியும். ஆகவே அதற்காக மருத்துவர்கள் காத்துள்ளனர்.