10 மாத குழந்தைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு - கர்நாடகாவில் அதிர்ச்சி
கர்நாடகாவில் 10 மாத குழந்தைக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில் இன்றைய தினத்தில் மட்டுமே 7 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம் கர்நாடகாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்திருக்கிறது. இதுவரை அங்கு 3 பேர் கொரோனாவால் உயிரிழந்திருக்கின்றனர். 4 பேர் சிகிச்சை பலன்பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், 10 மாத குழந்தைக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறது என்ற அதிர்ச்சித் தகவலை கர்நாடக அரசு உறுதி செய்துள்ளது. அந்தக் குழந்தை வெளிநாடு எதுவும் கொண்டு செல்லப்பட்டு வந்ததாக தகவல்கள் இல்லை. முன்னதாக, அக்குழந்தையின் குடும்பத்தினர் மட்டும் கேரளா சென்று திரும்பியுள்ளனர். அந்தக் குழந்தைக்கு காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் ஆகியவை இருந்துள்ளன. இதன் காரணமாக கடந்த 23ஆம் தேதி மங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்துள்ளனர்.
பின்னர், அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகள் மூலம் மார்ச் 26ஆம் தேதி குழந்தைக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. தற்போது அந்தக் குழந்தை உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், நெருங்கிய உறவினர்கள் மட்டுமே குழந்தையுடன் இருக்க அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் மங்களூர் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.