கேரளா| 10 மாத பெண் குழந்தையின் உடல்உறுப்புகள் தானம்.. முதல்வர் பினராயி விஜயன் பாராட்டு!
கேரளாவில் சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த 10 மாத குழந்தையின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. பெற்றோர் அளித்த ஒப்புதலின்பேரில் இரு சிறுநீரகங்கள், ஒரு இதய வால்வு, இரு கண் கருவிழிகள், கல்லீரல் ஆகியவை தேவைப்படும் தானமாக அளிக்கப்பட்டன.
கேரளாவில் இவ்வளவு குறைந்த வயதில் உடலுறுப்பு தானம் வழங்கப்படுவது இதுவே முதல்முறையாகும். சிறுமியின் பெற்றோர் அருண் ஆபிரகாம், ஷெரின் ஜான் ஆகியோரின் செயலை ஆளுநர் ராஜேந்தர அர்லேகர், சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் மற்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் பாராட்டியுள்ளனர்.
கேரளாவில்10 மாத குழந்தையின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டிருப்பது, கேரளாவின் உண்மையான உணர்வை பிரதிபலிப்பதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
X வலைத் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், இளையவயதில் உறுப்பு தானம் செய்பவராக ஆனதன் மூலம், சிறுமி அலின் மேலும் ஐந்து பேருக்குப் புதிய வாழ்க்கையை வழங்கியுள்ளார். இது கேரளாவின் உண்மையான உணர்வைப் பிரதிபலிக்கும் ஒரு மகத்தான இரக்கமான செயலாகும். குழந்தை அலினின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாகவும், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை சாத்தியமாக்கிய சுகாதாரத் துறையினர், காவல் துறையினர் உள்ளிட்டோருக்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்றும், அலின் ஷெரின் ஆபிரகாமுக்கு அதிகாரப்பூர்வ மரியாதையுடன் விடைகொடுப்போம் என்றும் பதிவிட்டுள்ளார்.

