அரசின் கோரிக்கையை ஏற்று 1.20 கோடி பேர் சமையல் எரிவாயு மானியத்தை கைவிட்டதால், ஏழைகளுக்கு எரிவாயு இணைப்பு கிடைத்ததாக நாடாளுமன்றத்தில் பேசிய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் தொடக்கமாக, மக்களவை மற்றும் மாநிலங்களவையின் கூட்டுக் கூட்டத்தில் பிரணாப் முகர்ஜி உரையாற்றினார். பயங்கரவாதத்தை நாட்டிலிருந்தே வேரறுக்க அரசு உறுதி பூண்டிருப்பதாகக் கூறிய அவர், பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவோரும், அதற்கு உதவி செய்வோரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றார். தேர்தல்களில் பணபலத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து விவாதம் தேவை என்றும் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். கறுப்புப் பணத்தை ஒழிக்க உயர்மதிப்புள்ள பண மதிப்பு நீக்க நடவடிக்கை எடுத்ததும், எல்லை தாண்டி பயங்கரவாதிகள் முகாம்களை அழித்ததும் அரசின் துணிச்சலான நடவடிக்கைகள் என்று அவர் குறிப்பிட்டார்.
பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு ஆதரவளித்தன் மூலம் ஊழலுக்கும் கறுப்புப் பணத்துக்கும் எதிராக மக்கள் அமைதிப் புரட்சி நடத்திக் காட்டியதாக பிரணாப் முகர்ஜி பெருமிதம் தெரிவித்தார். ஏழைகளின் நலனை முன்னிலைப்படுத்தியே மத்திய அரசின் கொள்கைகளும் திட்டங்களும் இருப்பதாகக் கூறினார்.