“ஒரு வாளி தண்ணீருக்கு ஒரு லிட்டர் பால்” - தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு நேர்ந்த கொடுமை
ஒரு பக்கெட் வாளி தண்ணீரில் ஒரு லிட்டர் பாலை கலந்து பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கொடுமை நடந்தேறி உள்ளது.
உத்தரபிரசேதம் மாநிலம் சோன்பாந்ரா மாவட்டத்தில் உள்ள பகுதி சோபான். இங்கு ஏழைப் பிள்ளைகள் தொடக்கப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 81 குழந்தைகள் படித்து வருகின்றனர். மதிய உணவுத் திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு மதிய உணவுடன் சேர்ந்து பால் வழங்குவது வழக்கம். ஆனால் அப்படி வழங்கப்படும் பால் முறையாக அந்தக் குழந்தைகளுக்கு வழங்கப்படுவதில்லை என்று புகார் எழுந்து உள்ளது. அதன் அடுத்த கட்டமாக ஒரு வாளி தண்ணீரில் ஒரு லிட்டர் பாலை மட்டுமே கலந்து குழந்தைகளுக்கு விநியோகிக்கப்பட்டதாக புதிய புகார் ஒன்று எழுந்துள்ளது. ஏழைக் குழந்தைகள் உணவில் இந்த அளவுக்கு கலப்படம் மலிந்துள்ளதாக எதிர்க்கட்சியினர் கவலை தெரிவித்துள்ளனர்.
இது சம்பந்தமாக சாலைபன்வா கிராம பஞ்சாயத்து வார்ட் உறுப்பினர் தேவ் படியா, ‘கடந்த புதன்கிழமை இந்தத் தொடக்கப் பள்ளியில் ஒரு லிட்டர் பாலை ஒரு பக்கெட் தண்ணீரில் கலந்து குழந்தைகளுக்கு வழங்கி உள்ளனர். மொத்தம் 81 குழந்தைகளுக்கு இந்தப் பால் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது’ என்று குற்றச்சாட்டி உள்ளார். இதற்கு முன்பு கூட இதைபோன்ற கொடுமைகள் நடந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தொடக்கப் பள்ளியின் பொறுப்பாளர் ஷாலிலேஷ் கனெளஞ்சியா, “இந்தப் பள்ளியில் மொத்த மாணவர்களின் சேர்க்கை 171. ஆனால் அன்று மட்டும் 81 குழந்தைகள் பள்ளிக்கு வந்துள்ளனர். எனக்கு இரண்டு பள்ளிகளை சேர்த்து கவனிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இரண்டு பள்ளிக்கும் தேவையான பாலை ஏற்பாடு செய்ய வேண்டி உள்ளது. ஆகவே சாலைபான்வா பள்ளியில் என்ன நடந்தது என்பது குறித்து என்னால் கவனிக்க முடியவில்லை. சமையல்காரரிடம் வழங்கப்பட்ட பால் குழந்தைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. அதை அவர்கள் குடித்தார்கள்” என்று மழுப்பலாக பதிலளித்துள்ளார்.
மற்றொரு அதிகாரியான கோராஹ்நாத் பட்டேல், “இந்தப் புகார் வந்தவுடனேயே நான் பள்ளி தலைமை ஆசிரியரை நாடினேன். உடனே பரிசோதித்து பார்த்து விளக்கம் அளிக்கும்படி கூறினேன். இந்தத் தவறான விஷயத்தை என்னால் பொறுத்து கொள்ள முடியாது. கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி இரண்டு நாள்களுக்குள் அறிக்கைக் கொடுக்கும்படி உத்தரவிட்டுள்ளேன். குற்றவாளிகள் கண்டறியப்பட்டு நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் அரசியல் ஆலோசகர் அஜய் ராய் கூறும்போது, “எல்லாவற்றையும் ஒழுங்காக கவனிப்பதாக அரசு கூறினாலும் உண்மைநிலை அப்படி இல்லை. வேறுபட்டுள்ளது. இந்த ஆட்சியில் குழந்தைகளுக்குகூட மதிய உணவு சரியாகப் போய்ச் சேரவில்லை. குழந்தைகளுக்கான உணவை சரியாக வழங்குவதில்கூட அரசாங்கம் தவறிவிட்டது. அரசுப் பள்ளியில் குழந்தைகளுக்கு தண்ணீர் கலந்த பால் வழங்கப்பட்டது என்பது பெரிய முரண்பாடாக உள்ளது” எனக் கூறியுள்ளார்.