”உங்கள் பிரச்னைகளில் இருந்து உங்களை விடுவிக்கும் சக்தி யோகாவுக்கு உண்டு ”- ஜக்கி வாசுதேவ்

”உங்கள் பிரச்னைகளில் இருந்து உங்களை விடுவிக்கும் சக்தி யோகாவுக்கு உண்டு ”- ஜக்கி வாசுதேவ்
”உங்கள் பிரச்னைகளில் இருந்து உங்களை விடுவிக்கும் சக்தி யோகாவுக்கு உண்டு ”- ஜக்கி வாசுதேவ்

யோகா செய்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும் என ஈஷா யோக மையத்தின் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் ஜூன் 21-ம் தேதி அதாவது இன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் யோகா தினத்தை முன்னிட்டு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் யோகா குறித்த ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது “ கடந்த சில மாதங்களாக உலகம் கொரோனா வைரஸ் என்ற மாபெரும் சவாலை எதிர்கொண்டு வருகிறது. இது நம்முடைய தலைமுறையில் நாம் சந்திக்கும் மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது.

நம் வாழ்வின் சுற்றுப்புறம் இதுபோன்ற ஒரு இக்கட்டானச் சூழலில் இருக்கும்போது நாம் உள்நிலையில் சிறப்பாக செயலாற்ற வேண்டியது மிக அவசியம். நமது உடல்திறன், புத்திசாலித்தனம், உணர்ச்சி சமநிலை என அனைத்தும் அதன் உச்சப்பட்ச சாத்தியத்தில் இயங்கவேண்டிய தருணம் இது. இதுபோன்ற நெருக்கடியான காலங்களில் ஏராளமான மனிதர்கள் உணர்ச்சி ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் பல நெருக்கடிக்கு உள்ளாவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

கொரோனா பரவும் காலத்திலும் அதற்கு பிந்தைய காலத்திலும் மனிதர்கள் உளவியல் ரீதியாக எதிர்கொள்ளும் நெருக்கடிகள் தான் உலகில் மிகவும் சவாலான விஷயமாக பார்க்கப்படுகிறது. நம்மை சுற்றி ஏற்கெனவே ஒரு பிரச்னை இருக்கும்போது நாமும் ஒரு பிரச்னையாக மாறி விடக்கூடாது. இதை எதிர்கொள்ள யோகாவை தவிர வேறு சிறந்த வழி எதுவும் இல்லை. இது மிக மிக முக்கியம்.

யோகா என்பது ஒரு தொடர்ச்சியான உடற்பயிற்சி கிடையாது. அதில் உடல்சார்ந்த அம்சங்கள் இருந்தாலும், எது நீங்கள், எது நீங்கள் இல்லை என்பதை விழிப்புணர்வு மூலம் தெளிவாக உணர முடியும்.

உங்கள் பிரச்னைகளில் இருந்து உங்களை விடுவிக்கும் சக்தி யோகாவுக்கு உண்டு. யோகா மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும். உடல், மனம் ஆகிய இரண்டு பரிமாணங்களின் மூலம் தான் மனிதர்கள் மகிழ்ச்சியையும், துன்பத்தையும் உணர்கின்றனர். யோகா பயிற்சிகள் மூலம் உங்களுக்கும் உங்கள் உடல் மற்றும் மன செயல்பாடுகளுக்கும் இடையே ஒரு இடைவெளியை உருவாக்க முடியும்.

தேசங்களும் தனி மனிதர்களும் கூடிய விரைவில் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும். அதற்கு உடல்நிலையில் வலுவும், மனதளவில் உறுதியும், உணர்ச்சியில் சமநிலையும் மிக முக்கியமானத் தேவை.

சில எளிய யோகப் பயிற்சிகள் செய்வதன் மூலம் இதை நாம் செய்துகாட்ட முடியும். யோகா என்பது தன்னிலை மாற்றத்துக்கான ஒரு கருவி. மதங்களையும், தத்துவங்களையும், கருத்தியலையும் கடந்த ஒரு தொழில்நுட்பம். இந்த உலக யோகா தினத்தில் நீங்கள் ஒவ்வொரும் யோகாப் பயிற்சிகள் மூலம் தன்னிலை மாற்றம் அடைந்து அன்பான, ஆனந்தமான மனிதர்களாக மாற வேண்டும் என்பது எனது விருப்பம்."என்று அவர் அதில் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com