‘என்னுடைய இந்தியாவில் பாதுகாப்பு இல்லையே’- நாடாளுமன்றம் முன்பு ‘தனியொரு பெண்’ ஆர்ப்பாட்டம்
பெண்களுக்கு இந்தியாவில் உரிய பாதுகாப்பு இல்லை எனக் கூறி இளம் பெண் ஒருவர் நாடாளுமன்ற வளாகத்தின் முன்பு தனியாக போராட்டம் நடத்தியுள்ளார்.
டெல்லியிலுள்ள நாடாளுமன்ற வளாகத்தின் முன்பு அனு தூபே என்ற இளம் பெண் ஒருவர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டார். அவரை டெல்லி காவல்துறையினர் ஜந்தர் மந்தர் பகுதியில் சென்று போராடுமாறு கேட்டுக் கொண்டனர். இதற்கு அப்பெண் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் அப்பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதையும் படிக்கலாமே: பத்தாம் வகுப்பு படித்துவிட்டு போலி ஆர்டிஓ அலுவலராக வலம் வந்தவர் கைது
அந்தப் பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணையில், “என்னுடைய இந்தியாவில் என்னால் பாதுகாப்பு இருப்பதாக உணர முடியவில்லை. குறிப்பாக இங்கு பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை” எனத் தெரிவித்துள்ளார். நேற்று ஹதராபாத் மாநிலத்தில் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
அதேபோல சில நாட்களுக்கு முன்பு ஜார்கண்ட் மாநிலத்தின் ராஞ்சி பகுதியில் 25 வயது இளம் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்தச் சம்பவங்களால் அப்பெண் போராட்டம் நடத்த தனியாக நாடாளுமன்றம் வந்ததாக கூறப்படுகிறது.