’நீங்க என்ன முடக்குறது நாங்களே செய்வோம்!’ பாஜகவின் மாஸ்டர் பிளானும் ராகுலின் ரியாக்‌ஷனும்!

’நீங்க என்ன முடக்குறது நாங்களே செய்வோம்!’ பாஜகவின் மாஸ்டர் பிளானும் ராகுலின் ரியாக்‌ஷனும்!
’நீங்க என்ன முடக்குறது நாங்களே செய்வோம்!’ பாஜகவின் மாஸ்டர் பிளானும் ராகுலின் ரியாக்‌ஷனும்!

பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வுக்கு நேர்மாறாக இரண்டாவது அமர்வு நடைபெற்று வருகிறது. வழக்கமாக நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள்தான் பல்வேறு விவகாரங்களை எழுப்பி முடக்குவார்கள். ஆனால், இந்த முறை ஆளும் பாஜக எம்பிக்களே நாடாளுமன்றத்தை அமளியால் முடக்கி வருகின்றனர். 

முதல் அமர்வை முடக்கிய எதிர்க்கட்சி எம்பிக்கள்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் அமர்வு தற்போது நடைபெற்று வருகிறது. பிப்ரவரி ஒன்றாம் தேதி தொடங்கி நடைபெற்ற முதல் பட்ஜெட் அமர்வு முழுவதும் ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பாக அதானி விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. குறிப்பாக, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்பியுமான ராகுல் இந்த விவகாரத்தை முழுவீச்சில் எடுத்துச் சென்றார். திமுக, இடதுசாரிகள், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான எதிர்க்கட்சிகளும் இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஓங்கி ஒலித்து அவையை முடக்கின. இதனால், ஆளும் பாஜக அரசு செய்வதறியாது திகைத்தது.

மாஸ்டர் பிளானுடன் வந்த பாஜக:

பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வுக்கு நேர்மாறாக இரண்டாவது அமர்வு நடைபெற்று வருகிறது. வழக்கமாக நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள்தான் பல்வேறு விவகாரங்களை எழுப்பி முடக்குவார்கள். ஆனால், இந்த முறை ஆளும் பாஜக எம்பிக்களே நாடாளுமன்றத்தை அமளியால் முடக்கி வருகின்றனர். அவர்கள் கையில் எடுத்துக் கொண்ட விவகாரம் லண்டனில் ராகுல் பேசிய பேச்சுதான். ஏற்கனவே, பிபிசி வெளியிட்ட ஆவணப் படம், அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட ஹிண்டன்பர்க் அறிக்கை என எல்லா விவகாரங்களின் போதும் இந்தியாவின் நன்மதிப்பை சீர்குலைக்க சதி நடப்பதாக பாஜகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர். அது ஓரளவு எடுபடவும் செய்கிறது என்பதால், லண்டனில் இந்தியாவின் மாண்பைச் சீர்குலைக்கும் வகையில் ராகுல் காந்தி பேசிவிட்டார் என்ற ஒரு நாட்டை கையிலெடுத்து நாடாளுமன்றத்தையே அதிரவைத்து வருகிறார்கள். முதல் நாளில் இருந்தே ராகுல் காந்தியின் விவகாரத்தை பாஜகவின் மூத்த தலைவர்களே இந்த விவகாரத்தை இரு அவைகளிலும் எழுப்பி வருகின்றனர்.

என்ன குற்றச்சாட்டை பாஜகவினர் வைக்கிறார்கள்?

சமீபத்தில் லண்டன் பயணம் மேற்கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி, இந்திய நாடாளுமன்றத்தில் மக்களவையில் உறுப்பினர்கள் பேசுவதற்கு அனுமதி வழங்க மறுக்கப்படுகிறது எனப் பேசியதாகவும், மதிப்புமிக்க நாடாளுமன்றத்தின் மக்களவையை அவமதிக்கக்கூடிய நோக்கில் ராகுல் காந்தியின் பேச்சு இடம்பெற்றதைக் கண்டிக்கும் வகையிலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் கூட்டாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் வலியுறுத்தியுள்ளனர். அதேபோல், ராகுல் காந்தி மீது தேசவிரோத வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.

லண்டனில் என்ன பேசினார் ராகுல் காந்தி?

லண்டன் சென்றிருந்த ராகுல் காந்தி, அங்குள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடம் உரையாற்றினார். அப்போது பேசிய அவர் மத்திய பாஜக அரசை விமர்சித்து பேசியிருந்தார். ராகுல் காந்தி தன்னுடைய பேச்சில், “பெகாசஸ் என்ற ஸ்பைவேர் மூலம் என் தொலைபேசி கண்காணிக்கப்பட்டு வருகிறது. மட்டுமன்றி எதிர்க்கட்சியினர் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகிறது. இந்தியாவில் பொதுத்துறைகள் சுதந்திரமாகச் செயல்பட வில்லை" என்று மத்திய அரசை விமர்சித்துப் பேசியிருந்தார்.

பாஜவினரின் குற்றச்சாட்டுகளை மறுக்கும் ராகுல் காந்தி!

”இந்தியாவிற்கு எதிராக எதுவும் பேசவில்லை” என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். லண்டனில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பேசிய ராகுல் காந்தி இந்திய ஜனநாயகத்தின் மாண்பைக் குலைக்கும் வகையிலும் இந்தியாவை அவமானப்படுத்தும் வகையிலும் பேசியதாக பாரதிய ஜனதா கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

”ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்” எனக் கூறி நாடாளுமன்றத்தை பாஜகவினர் முடக்கி வரும் நிலையில், நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்பதற்காக வருகை தந்த ராகுல் காந்தி, ”நாட்டிற்கு எதிராகவோ, அவமதிக்கும் வகையிலோ தாம் எதுவும் பேசவில்லை” என தெரிவித்தார்.

”தாம் பேசியதில் ஆட்சேபத்துக்குரியது எதுவும் இல்லை” எனவும் அவர் விளக்கம் அளித்தார். மேலும், இதுதொடர்பாக மக்களவையில் விளக்கம் கொடுக்க சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்துப் பேசுவதற்கு அனுமதியும் கோரினார்.

செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “லண்டன் பேச்சு சர்ச்சை தொடர்பாக நான் முதலில் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க விரும்புகிறேன். அதன் பிறகு அந்த சர்ச்சை குறித்து உங்களிடம் பேசுகிறேன். நான் சபாநாயகரைச் சந்தித்து இன்று மக்களவையில் பேச அனுமதி கேட்டேன். ஆனால், மக்களவை ஒரு சில நிமிடங்களிலேயே நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. ஆகவே, எனக்குப் பேச வாய்ப்பு கிட்டவில்லை.
மக்களவையில் பதில் அளிப்பது எனது உரிமை. என்மீது பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதற்குப் பதில் அளிப்பது எனது உரிமை. எனக்குப் பேச அனுமதி மறுக்கப்பட்டால் ஜனநாயகத்தின் குரல்வளை மிதிக்கப்படுகிறது என்கிற என்னுடைய குற்றச்சாட்டு உண்மையாகும். ஆகவே, இது இந்திய ஜனநாயகத்திற்கு பரீட்சை. நாடாளுமன்றத்தில் நான்கு அமைச்சர்கள் எனக்கு எதிராக குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர். அந்த குற்றச்சாட்டுகளுக்குப் பதில் அளிக்க எனக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளில் பிரதமர் மோடி தொடர்ந்து அதானி குடும்பத்துக்கு ஆதரவாகச் செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதையே நான் மக்களவையில் பேசினேன். அதாவது, அதானிக்குச் சாதகமாக பிரதமர் மோடி எந்த அளவுக்குச் செயல்படுகிறார் என்பதைப் பற்றி பேசினேன். அதானி குறித்து நான் பேசியதில் ஆட்சேபனையாக எதுவும் இல்லை. ஆனால், நாடாளுமன்றத்தில் நான் அதானி விவகாரம் குறித்துப் பேசியது முழுவதும் அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளது” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com