"ஜம்மு காஷ்மீர் மக்களே எனது கட்சி கொடியையும் பெயரையும் முடிவு செய்வர்" - குலாம் நபி ஆசாத்

"ஜம்மு காஷ்மீர் மக்களே எனது கட்சி கொடியையும் பெயரையும் முடிவு செய்வர்" - குலாம் நபி ஆசாத்
"ஜம்மு காஷ்மீர் மக்களே எனது கட்சி கொடியையும் பெயரையும் முடிவு செய்வர்" - குலாம் நபி ஆசாத்

தனது கட்சிக்கு ஜம்மு காஷ்மீர் மக்களே கட்சி கொடியையும் பெயரையும் முடிவு செய்வார்கள் என்று குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து சமீபத்தில் விலகிய குலாம் நபி ஆசாத், தனது புதிய கட்சியை இன்று அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் கட்சியின் பெயர், கொடியை ஜம்மு காஷ்மீர் மக்களே தேர்ந்தெடுப்பார்கள் என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் 50 வருடங்களுக்கும் மேல் இருந்த மூத்த அரசியல்வாதி குலாம் நபி ஆசாத், சமீபத்தில் அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்தையும் துறந்து கட்சியிலிருந்து விலகி அதிர்ச்சி கொடுத்தார். 'ஒரு அரசியல்வாதிக்கான சூட்சுமமும், திறமையும் ராகுல் காந்திக்கு இல்லை' என குலாம் நபி ஆசாத் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இதனைத் தொடர்ந்து குலாம் நபி ஆசாத்துக்கு ஆதரவாக ஜம்மு-காஷ்மீர் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் பெரும்பாலானோர் அக்கட்சியில் இருந்து விலகினர். ஒட்டுமொத்தமாக ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் கட்சி, தற்போது குலாம் நபி ஆசாத் வசமாகி இருக்கிறது.

இந்நிலையில் டெல்லியில் இருந்து இன்று காஷ்மீர் வரும் குலாம் நபி ஆசாத்துக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதோடு அவரது ஆதரவாளர்கள் பேரணி மற்றும் பொதுக் கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்துள்ளனர். பேரணியை தொடர்ந்து நடக்கும் பொதுக் கூட்டத்தில், குலாம் நபி ஆசாத் தன் புதிய கட்சி குறித்து அறிவிப்பார் என கூறப்பட்டது.

இந்நிலையில் பொது கூட்டத்தில் கலந்து கொண்ட குலாம் நபி ஆசாத் கட்சி குறித்து கேட்கப்பட்ட கேள்விகளூக்கு பதிலளித்து பேசினார். அப்போது “ எனது கட்சிக்கு நான் இன்னும் பெயரை முடிவு செய்யவில்லை. ஜம்மு காஷ்மீர் மக்களே கட்சியின் பெயரையும் கொடியையும் முடிவு செய்வார்கள்” என்று கூறினார்.

மேலும் நான் கட்சிக்கு ஒரு இந்துஸ்தானி பெயரைச் சூட்டுவேன். அது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளும் ஒன்றாக இருக்கும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் ஜம்மு - காஷ்மீரில் விரைவில் நடக்கவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு, மீண்டும் அவர் முதலமைச்சர் பதவியை கைப்பற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com