’படித்ததும் கிழித்துவிடவும்’... எட்டாம் வகுப்பு மாணவிக்கு காதல் கடிதம் எழுதிய ஆசிரியர்!

’படித்ததும் கிழித்துவிடவும்’... எட்டாம் வகுப்பு மாணவிக்கு காதல் கடிதம் எழுதிய ஆசிரியர்!
’படித்ததும் கிழித்துவிடவும்’... எட்டாம் வகுப்பு மாணவிக்கு காதல் கடிதம் எழுதிய ஆசிரியர்!

உத்தரப்பிரதேசத்தில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு ஆசிரியர் ஒருவர் காதல் கடிதம் எழுதியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச கன்னோஜ் மாவட்டத்தில் சதார் கொத்வாலி கிராமத்தில் உயர்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிபவர் 47 வயதான ஹரி ஓம்சிங். இவர், அப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு காதல் கடிதம் எழுதியுள்ளார். அதில், ’நான், உன்னை அதிகம் நேசிக்கிறேன். பள்ளி விடுமுறை நாட்களில் உன்னைக் காணாதது அதிக வருத்தத்தைத் தருகிறது. ஆகையால், உனக்கு எப்போது முடியுமோ, அப்போது தொலைபேசி வழியே நீ என்னைத் தொடர்புகொண்டு பேசு.

உண்மையிலேயே நீயும் காதலித்தால் என்னைத் தேடி வருவாய். விடுமுறைக்குப் பின்னர், என்னை தனியாக வந்து சந்திக்கவும். உன்னை திருமணம் செய்துகொள்கிறேன். உன்னை எப்போதும் நேசிப்பேன்’ என எழுதியிருக்கும் அந்தக் கடிதத்தின் இறுதியில், ‘இதைப் படித்தவுடன் யாருக்கும் தெரியாமல் கிழித்து விடவும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதைப் படித்து அந்த மாணவி அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்த விஷயம், அந்த மாணவியின் தந்தைக்குத் தெரியவர, காவல் துறையில் புகார் அளித்துள்ளார். இதைக் கேள்விப்பட்ட ஆசிரியர், மாணவியின் தந்தையைப் போனில் அழைத்து மிரட்டியுள்ளார். ’தன் மீது யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. அப்படி யாராவது என்னைத் துன்புறுத்தினால் உங்கள் மகளைக் கடத்திச் சென்று விடுவேன். தவிர, உங்களையும் கொலை செய்துவிடுவேன்’ என மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து மேலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ஆசிரியரை அழைத்து போலீசார் விசாரித்துள்ளனர். அப்போது, இதுபோன்ற செயலைச் செய்ததற்காக ஆசிரியரை மன்னிப்பு கேட்கச் சொல்லியிருக்கின்றனர். ஆனால், அவர் அப்போதும் மன்னிப்பு கேட்காமல் போலீசாரையே மிரட்டியுள்ளார்.  இதுகுறித்து மாவட்ட கல்வி அதிகாரி கவுஸ்துப் சிங், “இந்த விவகாரம் தொடர்பாக குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அவர்களிடம், உண்மை நிலவரம் குறித்து அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. அவர்மீது தவறு இருக்கிறது என உறுதிப்படுத்தப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார். அதுபோல், ஆசிரியர் சங்கத் தலைவர் அனுப் மிஸ்ராவும், “ஆசிரியர் மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

- ஜெ.பிரகாஷ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com