“கூட்டுக் குடும்பத்தை கையில் எடுங்க”-இப்போ அதுதான் தீர்வு.. விளக்கும் ஆனந்த் ஸ்ரீநிவாசன்

“கூட்டுக் குடும்பத்தை கையில் எடுங்க”-இப்போ அதுதான் தீர்வு.. விளக்கும் ஆனந்த் ஸ்ரீநிவாசன்
“கூட்டுக் குடும்பத்தை கையில் எடுங்க”-இப்போ அதுதான் தீர்வு..  விளக்கும் ஆனந்த் ஸ்ரீநிவாசன்

இந்தியாவில் கொரோனாத் தொற்று பரவியதிலிருந்தே பொதுமக்கள் கடுமையான நெருக்கடிக்குள் தள்ளப்பட்டனர். நீண்ட காலமாக பணியாற்றி வந்த ஊழியர்களை கூட கொரோனாப் பெயரைச் சொல்லி நடுத்தெருவில் விட்டன கார்ப்ரேட் நிறுவனங்கள். சொகுசு காரில் சென்றவர்கள் கூட இன்று கடைத்தெருவின் ஓரத்தில் காய்கறிக் கடை வைத்து பிழைப்பு நடத்தும் நிலைக்கு வந்துவிட்டார்கள். அந்தளவுக்கு மானுடத்தின் உண்மையான முகங்களை கிழித்தெரிந்திருக்கிறது இந்தக் கொரோனா.

ஆனால் இந்த நெருக்கடியான காலக்கட்டத்திலும் கூட சிலர் தங்களது பாதுகாப்பை அடுத்த ஒரு வருடத்திற்கு உறுதி செய்து வைத்திருக்கிறார்கள். இதற்கு ஒரு காரணம் இருந்திருக்கிறது. ஆம் அதுதான் சேமிப்பு. முந்தைய காலங்களில் சேமிப்பில் சிறிது விழிப்புணர்வாக இருந்தவர்கள் அனைவரும் இன்று காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள்.

மக்களிடம் குறைந்து வரும் சேமிப்பு விழிப்புணர்வு குறித்தும், வரும் காலங்களில் நாம் எந்த மாதிரியான சேமிப்பு மற்றும் தொழில் துறைகளில் கவனம் செலுத்தலாம் என்பது குறித்தும் விளக்கங்களைப் பெற பிரபல பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீநிவாசனை புதிய தலைமுறை இணையத்தில் இருந்து தொடர்பு கொண்டு பேசினோம். நாம் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த விளக்கங்கள் பின்வருமாறு:-

இந்த நெருக்கடியான காலக்கட்டத்திற்குள் மக்கள் வலுக்கட்டாயமாகத் தள்ளப்பட்டுள்ளனர். அவர்கள் இதுபோன்ற நேரங்களில் எப்படி சமாளிக்க முடியும்?

நான் ஆரம்பத்தில் இருந்தே இது குறித்துதான் பேசி வந்திருக்கிறேன். அதுதான் சேமிப்பு. சேமிப்பை பொருத்தவரையில் தங்கத்திற்கு ஈடு இணையே கிடையாது. அதனால்தான் குறைந்தது 400 கிராம் தங்கத்தையாவது சேமியுங்கள் என்று கூறினேன். இன்று உங்கள் கையில் 100 கிராம் தங்கம் இருந்தால் அடுத்த ஒருவருடத்திற்கு நீங்கள் உங்களின் அடிப்படை தேவைகள் பற்றி மட்டுமாவது கவலைப்படாமால் இருந்திருக்கலாம்.

சரி நடந்தது நடந்தாகிவிட்டது. இனி மக்கள் எது போன்ற சேமிப்பு முறைகளை கையாள்வது சரியானதாக இருக்கும்?

முதலில் இந்தச் சூழ்நிலை எப்போது சரியாகும் என உங்களால் கூற முடியுமா? பிராணப் சென் என்ற பொருளாதார முன்னாள் திட்ட ஆராய்ச்சியாளர் இந்த நெருக்கடியான காலக்கட்டமானது சரியான நிலைமைக்கு வர இன்னும் 3 வருடங்களாவது ஆகும் என்று கூறியிருக்கிறார். ஜிடிபி வளர்ச்சியும் சுருங்கும் நிலையிலேயே உள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று முடிவுக்கு வர 2021 அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்கள் ஆகலாம்.

இந்தியாவைப் பொருத்தவரை 2022 ஜனவரி, பிப்ரவரி கூட ஆகலாம். ஆகவே இந்த நெருக்கடியான காலக்கட்டத்தில் நாம் தனிக் குடும்பத்துடன் வசிப்பது நல்லதல்ல. அதற்கு பதிலாக நாம் கூட்டுக் குடும்ப முறையை கையில் எடுக்கலாம். அப்படி நாம் இருக்கும்போது அடிப்படைத் தேவைகளுக்கு நாம் செலவழிக்கும் பணத்தை கூட பெருமளவில் மிச்சப்படுத்த முடியும்.

அதையும் மீறி உங்களுக்கு கடன் தேவைப்பட்டால் தங்க நகைக் கடன் முறையில் கடன் பெறுங்கள். அதுவும் இல்லை என்றால் நிலம் மூலம் கடன் பெறுங்கள். இந்தக் காலத்தில் தனிநபர் கடன் பெறுவது, கிரிடிட் அட்டைகளை உபயோகிப்பது உள்ளிட்டவற்றை தயவு செய்து தவிர்த்து விடுங்கள்.

இந்தக் காலத்தில் வேலை இழந்த மக்கள் எதுபோன்ற தொழில்களில் தங்களை ஈடுபடுத்தி தங்களை காப்பாற்றிக் கொள்ளலாம்?

முன்பெல்லாம் வேலை இழந்தால் நாம் மிகக் கடுமையான நெருக்கடிக்குத் தள்ளப்படுவோம். ஆனால் தற்போது அந்த நிலைமை இல்லை. ஆன்லைனில் வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன. நாம் தான் கெளரவ குறைச்சல் பார்க்காமல் செயலில் இறங்க வேண்டும். யூடியூப் ஆரம்பிக்கலாம், நிறுவனங்களுக்கு ஆங்கில கட்டுரைகளை தமிழில் மொழிப்பெயர்த்து கொடுக்கலாம். குறிப்பாக டிஜிட்டல் மார்க்கெட்டிங். அதற்கு வரும் காலத்தில் மிகப் பெரிய மார்க்கெட் இருக்கிறது. ஆகவே அதனை கற்றுக் கொள்வதும் சிறந்ததாக அமையும்.

ஸ்டாக் மார்க்கெட், மற்றும் மியூச்சல் பண்ட் குறித்து?

மியூச்சல் பண்டில் கடந்த 3 ஆண்டுகளாக முதலீடு செய்தவர்களுக்கு நஷ்டமே கிட்டும். அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அதில் முதலீடு செய்தால், அதற்கும் அதே நிலைமைதான். ஸ்டாக் மார்க்கெட் பொருத்தவரை பெரிதளவு வாய்ப்புகள் இல்லை.” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com