”சுரங்கம் தோண்டியும் பயனில்ல.. எங்கள மன்னிச்சுடுங்க” - எழுதி வைத்துச் சென்ற கொள்ளையர்கள்!

”சுரங்கம் தோண்டியும் பயனில்ல.. எங்கள மன்னிச்சுடுங்க” - எழுதி வைத்துச் சென்ற கொள்ளையர்கள்!
”சுரங்கம் தோண்டியும் பயனில்ல.. எங்கள மன்னிச்சுடுங்க” - எழுதி வைத்துச் சென்ற கொள்ளையர்கள்!

திருடவும் கொள்ளையடிக்கவும் செல்வோர் வித்தியாசமாக, விநோதமாக எதையாவது செய்வதும், எழுதுவதும் வழக்கமாகவே அண்மைக்காலமாக நடந்து வருகிறது. அப்படியான செயல் சம்பவம் ஒன்று உத்தர பிரதேசத்தின் மீரட்டில் உள்ள நகைக்கடை கொள்ளையின் போது அரங்கேறியிருக்கிறது.

அதன்படி கடந்த புதன் கிழமை (பிப்.,1) அன்று மீரட்டில் உள்ள நகைக்கடை ஒன்றில் கொள்ளையடிப்பதற்காக 15 அடிக்கு ஒரு சுரங்கப்பாதையை தோண்டி உள்ளே சென்று எந்த நகையையும் திருடாமல் எங்களை மன்னித்து விடுங்கள் என சுவற்றில் எழுதியும் வைத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள் இரு கொள்ளையர்கள்.

15 அடிக்கு வெற்றிகரமாக சுரங்கத்தை தோண்டிய அந்த கொள்ளையர்கள் இருவரால், நகைக்கடையில் இருந்த லாக்கரை திறக்க முடியாமல் போயிருக்கிறது. இதனால் “எங்களை மன்னித்து விடுங்கள்” எனக் குறிப்பிட்டு சுன்னு, மன்னு என்ற தங்களது பெயரையும் அந்த சுவற்றில் எழுதி வைத்துச் சென்றிருக்கிறார்கள்.

மறுநாள் வியாழனன்று வழக்கம்போல நகைக்கடையை திறந்த உரிமையாளர் தீபக் குமாருக்கு கொள்ளை முயற்சி நடந்ததை கண்டு அதிர்ந்து போயிருக்கிறார். உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுக்கவே விரைந்து வந்து விசாரணையை முடுக்கிவிட்டிருக்கிறார்கள்.

இதனையடுத்து “நகைக்கடையில் கொள்ளையடிக்க கேஸ் கட்டருடன் வந்தும் லாக்கரை திறக்க முடியாமல் போனதால் கொள்ளையர்கள் திரும்பிச் சென்றிருக்கிறார்கள். இதுபோக, கடையில் இருந்த கிருஷ்ணர் சிலை தங்களை பார்த்தது போல இருந்ததால் அதனை திருப்பி வைத்துவிட்டு லாக்கரை திறக்க முற்பட்டு தோல்வியடைந்திருக்கிறார்கள்.

பின்னர், கடையில் இருந்த சிசிடிவி கேமிராவில் தாங்கள் செய்ததெல்லாம் பதிவாகியிருக்கும் என்பதால் சிசிடிவியின் ஹார்ட் டிஸ்க்கை மட்டும் அலேக்காக தூக்கிச் சென்றிருக்கிறார்கள் என்பது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.” என பிரம்மப்புரி பகுதி போலீசார் சுச்சிதா சிங் தெரிவித்திருக்கிறார்.

மேலும், “அந்த 15 அடி சுரங்கப்பாதையை பல நாட்களாக திட்டமிட்டுதான் தோண்டியிருக்கிறார்கள். ஆனால் கடவுள் தண்டிப்பார் என எண்ணியதால் கொள்ளையடிப்பதில் இருந்து பின்வாங்கியிருக்கிறார்கள். நகைக்கடையின் சிசிடிவி காட்சிகளை பெற முடியாவிட்டாலும் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை கண்காணித்து வருகிறோம்.” என்றும் கூறியிருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com