”அப்பாவா புரோமோஷன் கிடைச்சிருக்கு..” - மகளுக்காக Vice President வேலையை உதறிய தந்தை!

”அப்பாவா புரோமோஷன் கிடைச்சிருக்கு..” - மகளுக்காக Vice President வேலையை உதறிய தந்தை!
”அப்பாவா புரோமோஷன் கிடைச்சிருக்கு..” - மகளுக்காக Vice President வேலையை உதறிய தந்தை!

குழந்தைகளை பெற்றெடுக்கும் தாய்மார்களுக்கு இணையாக தந்தைகளுக்கு உரிய மகப்பேறு விடுப்பு எதிர்காலத்திலாவது கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மூத்த துணைத் தலைவராக இருந்த தன்னுடைய வேலையை ராஜினாமா செய்துவிட்டு செல்ல மகளை பார்த்துக் கொள்கிறார் ஐ.ஐ.டி. கரக்பூர் பட்டதாரி.

ஐ.ஐ.டி. கரக்பூரில் படித்துவிட்டு முன்னணி நிறுவனத்தில் சீனியர் துணைத் தலைவராக இருந்தவர் அன்கிட் ஜோஷி. பேட்டர்னிட்டி விடுமுறை காலம் போதாத காரணத்தால் அதிக சம்பளம் பெறும் தன்னுடைய வேலையையே ராஜினாமா செய்திருக்கிறார். இது தொடர்பான தகவல் தற்போது humans of bombay என்ற தளத்தின் இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் தெரிய வந்திருக்கிறது.

அன்கிட் ஜோஷி, ஆகான்ஷா தம்பதிக்கு அண்மையில்தான் ஸ்பிதி (spiti) என பெயரிடப்பட்ட பெண் குழந்தை பிறந்திருக்கிறது. ஸ்பிதியை கவனித்துக்கொள்ள ஆகான்ஷா மெட்டர்னிட்டி விடுமுறையில் இருந்தாலும், தானும் குழந்தையை பார்த்துக்கொள்ள வேண்டும் என எண்ணி வேலையை ராஜினாமா செய்திருக்கிறார் அன்கிட். 

இது குறித்து பேசியிருக்கும் அன்கிட் ஜோஷி, “சில நாட்களுக்கு முன்புதான் என் மகள் பிறந்தாள். அதிகளவு சம்பளம் பெறும் என்னுடைய வேலையை விட்டேன். இது விநோதமான முடிவுதான். பலரும் மிகப்பெரிய கஷ்டமான நாட்களை கொடுக்கும் என தெரியுமா என்றெல்லாம் கேட்டார்கள். ஆனால் என் மனைவி ஆகான்ஷா என் பக்கம் இருப்பதே எனக்கு போதும்.

ஹிமாச்சலில் உள்ள ஸ்பிதி வேல்லிக்கு சுற்றுலா சென்றிருந்தபோதே எங்கள் மகளுக்கு ஸ்பிதி என பெயரிட முடிவெடுத்திருந்தோம். அதன்படியே எங்கள் கனவும் நிறைவேறியது. ஸ்பிதி பிறந்த பிறகு எங்கள் வாழ்க்கையே மன நிறைவை பெற்றது போல இருக்கிறது. ஆனால் என் மகள் பிறப்பதற்கு முன்பே, என் பேட்டர்னிட்டி விடுப்பை தாண்டி அவளுடன் என் நாட்களை கழிக்க வேண்டும் என எண்ணியிருந்தேன். ஆனால் வெவ்வேறு நகரங்களுக்கு சென்று பணியாற்ற வேண்டிய நிலை இருந்தாலும் என் வேலையை விரும்பியே செய்தேன். ஆனால், ஸ்பிதி பிறந்த பிறகு நெடிய பிரேக் தேவைப்பட்டது. ஆனால் நான் வேலை பார்க்கும் நிறுவனம் அதற்கு அனுமதிக்காது என தெரியும்.

ஆகையாலேயே “தந்தையாக பதவி உயர்வு கிடைத்திருக்கிறது. அதை நேசிக்கிறேன்.” என ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டேன். என் மகளுடன் இருப்பதே என் வாழ்க்கையாகிவிட்டது. இரவில் தாலாட்டு பாடுவது, தூங்க வைப்பது போன்ற தருணங்களை ரசிக்கிறேன். அப்படியே ஒரு மாதம் கடந்துவிட்டது. இது ஒரு தூக்கமில்லாத, உற்சாகமான, சோர்வு மற்றும் இன்னும் மகிழ்ச்சியான காலமாக உள்ளது. சில மாதங்களுக்குப் பிறகு நான் வேலைக்கு விண்ணப்பிப்பேன். ஆனால் அதுவரை, நான் இந்த நேரத்தை மிகச் சரியாகப் பயன்படுத்தி என் மகளுக்காக இருப்பேன்.

என் மனைவி ஆகாஷ்னாவுக்கும் ஸ்பிதி பிறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பே மேனேஜராக பதவி உயர்வு கிடைத்திருக்கிறது. தாய்மையிலும், வேலையிலும் சிறப்பாக இருப்பது மனநிறைவாகவே இருக்கிறது. ஆனால் அதே நேரத்தில், பெரும்பாலான நிறுவனங்கள் தந்தைகளுக்கான பேட்டர்னிட்டி விடுப்பை எவ்வாறு வழங்குகின்றன என்பதைப் பார்ப்பது என்னை வருத்தப்படுத்துகிறது.

இது வெறும் குழந்தைகளுடனான தந்தையின் பிணைப்பை குறைப்பதோடு, தந்தை என்ற பொறுப்பையும் குறைக்கிறது. நான் எடுத்திருக்கும் முடிவு அத்தனை எளிதானது அல்ல. ஆனால் எதிர்காலத்தில் இது போன்ற மாற்றம் வரும் என நம்புகிறேன். ஏனெனில், இத்தனை நாட்களாக என் மகளுடன் இருந்தது, பரப்பரப்பாக ஓடியாடி வேலை பார்த்ததை விட நிறைவாக இருக்கிறது” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com